செய்யூர் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கோவாவில் சிக்கினார்

செய்யூர்: செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் அதிமுக துணை தலைவர் அரசு (எ) ராமச்சந்திரன், கடந்த 19ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, கூலிப்படை தலைவன் புதுச்சேரி கரவாடிகுப்பத்தை சேர்ந்த ஸ்ரீதர் (40), கடந்த 22ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும், சந்தேகத்தின்பேரில் இடைக்கழிநாடு மாரிமுத்து (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், மாரிமுத்து அதே பகுதியை சேர்ந்த நில தரகர் விக்னேஷ் (31) ஆகியோர் நண்பர்கள். விக்னேஷ் நிலம் விற்பனை தொடர்பாக ராமச்சந்திரனிடம் இருந்து ரூ.45 லட்சம் வாங்கி, அதை சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையறிந்த ராமச்சந்திரன், விக்னேஷிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனார். இதனால், விக்னேஷுடன் சேர்ந்து புதுச்சேரியில் இருந்து கூலிப்படையினரை ஏவி ராமச்சந்திரனை தீர்த்துக் கட்டியதாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனிப்படை போலீசார், விக்னேஷை தேடிவந்தனர். அவர், கோவாவில் பதுங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார், கோவாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பதுங்கி இருந்த விக்னேஷை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக ஸ்ரீதரின் கூட்டாளி கணேசன் என்பவரையும் கைது செய்தனர்.

Related Stories: