ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத்தில் நகரும் நியாய விலை கடை துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நகரும் நியாயவிலைக் கடை துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும், பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசிய பொருட்களை வழங்க ரூ.9.66 கோடியில், 3501 நகரும் நியாய விலை கடைகள் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில், 42 நகரும் நியாய விலை கடைகள் திட்ட துவக்க விழா, குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் கிராமத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ பழனி தலைமை வகித்தார். கலெக்டர் பொன்னையா, முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ திவ்யஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பென்ஜமின், சிறப்பு விருந்தினராக கலந்து நகரும் நியாய விலை கடை வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம், திருவள்ளுவர் மாவட்ட கூட்டுறவு விற்பனையாளர் சங்க தலைவர் எழுச்சூர் ராமச்சந்திரன், ஸ்ரீபெரும்புதூர் வீட்டுவசதி கூட்டுறவு சங்க தலைவர் போந்தூர் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். வாலாஜாபாத்: தமிழக அரசின் நகரும் நியாய விலைக் கடைகள் துவக்க விழா வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில், கூடுதல் பதிவாளர் லோகநாதன், சரக துணை பதிவாளர் உமாபதி, வாலாஜாபாத் பேரூராட்சி செயல் அலுவலர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: