குடும்பம் நடத்த வருமானம் இல்லாததால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தப்பிய தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

சென்னை: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் வழக்கறிஞர் ரவி. கடந்த 2015ம் ஆண்டு பூட்டியிருந்த இவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது, ரவியின் மகள் ஐஸ்வர்ய பிரியதர்ஷினி (13), மகன் ஜெயகிருஷ்ண பிரபு (11) ஆகியோர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தனர். சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவியை தேடியபோது, மாயமானது தெரிந்தது. போலீசார் விசாரணையில், காதல் திருமணம் செய்து கொண்ட ரவி, கருத்து வேறுபாடால் மனைவியை பிரிந்து குழந்தைகளுடன் இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.

போதிய வருவாய் இல்லாததால், வீட்டிற்கு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்யும்படி கூறியுள்ளார். வருவாய் இல்லாததாலும், குழந்தைகளை வளர்க்க முடியாததாலும், மனைவி பிரிந்து சென்றதாலும், வீடு இல்லாததாலும் மன உளைச்சலில் இருந்த ரவி, மகன் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு தப்பியுள்ளார். செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதால், அவரை பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ரவி வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் நம்பரை வைத்து மண்ணடியில் பதுங்கியிருந்த ரவியை, தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

* விபத்து நாடகம்

குழந்தைகளை கொலை செய்த ரவி, தீவிபத்தில் குழந்தைகள் இறந்தது போல் நாடகமாட திட்டமிட்டு, நீளமான துணியின் ஒரு முனையில் குழந்தைகளையும், மறு முனையில் காஸ் சிலிண்டரையும் கட்டி, அதில் தீவைத்து விட்டு, வீட்டை பூட்டி விட்டு தப்பியுள்ளார். ஆனால், தீ பாதியிலேயே அணைந்து விட்டதால், அவர் நினைத்தது நடக்கவில்லை. இதையடுத்து, வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர்.

Related Stories: