×

ரூ.555 கோடி இழப்புடன் மூட்டை கட்டுகிறது தொழிற்சாலையை மூடுகிறது ஹார்லி டேவிட்சன்

புதுடெல்லி: உலகளாவிய மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனம், இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது. பணக்கார இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற பைக்குகளில் முதன்மை இடம் ஹார்லி டேவிட்சனுக்குதான். அமெரிக்காவின் அந்தஸ்துக்கு சான்றாக திகழும் இந்த நிறுவனம், ஹரியானாவில் தொழிற்சாலை அமைத்துள்ளது. உதிரி பாகங்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்கிறது.
இந்தியாவில் இந்த பைக் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் விற்பனை 87% சரிந்து விட்டது. ஏற்றுமதி 40 சதவீதம் சரிந்து விட்டது. உலக அளவில் 2,10,000 பைக்குகளை விற்ற இந்த நிறுவனத்துக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

எனவே, இந்த நிறுவனத்தின் உலகளாவிய மறு சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹரியானாவில் உள்ள பைக் அசெம்ப்ளிங் தொழிற்சாலையை மூடிவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேற இந்த நிறுவனம் திட்டமிட்டது. இதன்படி இந்திய தொழிற்சாலை மூடப்படுகிறது. இந்த மறு சீரமைப்பு நடவடிக்கையால், இந்த நிறுவனத்தில் இங்கு பணிபுரியும் 70 தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். அவர்களுக்கான செட்டில்மென்ட், பிற தொழில்களுடனான ஒப்பந்த முறிவு மற்றும் இதர செலவினங்கள் சேர்த்து சுமார் 7.5 கோடி டாலர் (சுமார் ரூ.555 கோடி) இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த 10 ஆண்டுகளில், 27,000 ஹார்லிடேவிட்சன் பைக்குகள் மட்டுமே விற்பனையாகின. கடந்த 2015-16 நிதியாண்டில் 4,708 பைக் விற்றன. இது கடந்த நிதியாண்டில் 2,470 ஆக சரிந்தது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 106 பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டன.
* டிரம்ப்பின் தொடர் விமர்சனங்களுக்கு பிறகுதான், ஹார்லி டேவிட்சன் பைக் மீதான இறக்குமதி வரி 75 சதவீதத்தில் இருந்து கடந்த பிப்ரவரியில் 50 சதவீதமாக குறைக்கப்பட்டது.

* பாஜ ஆட்சியில் வெளியேறும் 3வது அமெரிக்க நிறுவனம்
கடந்த 2017ல் ஜெனரல் மோட்டார்ஸ், குஜராத்தில் இருந்த தனது தொழிற்சாலையை விற்று விட்டு வெளியேறியது. கடந்த ஆண்டு, போர்டு நிறுவனம் வெளியேற முடிவு செய்தது. அந்த நிறுவனத்தின் பெரும்பாலான சொத்துக்கள், கூட்டு முயற்சி ஒப்பந்தத்தின் மூலம் மகிந்திரா நிறுவனத்துக்கு மாறின. அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக்காலத்திலும், இந்தியாவில் பாஜ ஆட்சிக்காலத்திலும் இந்தியாவில் இருந்து வெளியேறும் 3வது அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனம் ஹார்லி டேவிட்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Harley-Davidson ,factory , Harley-Davidson closes factory with Rs 555 crore loss
× RELATED வண்டிப்பாதையை தார்ச்சாலையாக மாற்ற கோரிக்கை