×

53 பேர் கொல்லப்பட்ட டெல்லி கலவர வழக்கில் போலீஸ் அதிரடி சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உட்பட பல தலைவர்கள் குற்றவாளியாக சேர்ப்பு: 17,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: டெல்லியில் 53 பேர் கொல்லப்பட்ட கலவர வழக்கு தொடர்பாக, 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். அதில், சல்மான் குர்ஷித், பிருந்தா காரத் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, கடந்த பிப்ரவரி 24ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியான காஜியாபாத், சீலாலம்பூர் போன்ற இடங்களில் மிகப்பெரிய அளவில் வகுப்பு கலவரம் நடந்தது. இதில், குறிப்பிடத்த மதத்தை சேர்ந்த 53 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதை விசாரித்த அப்போதைய உயர் நீதிமன்றம் நீதிபதி முரளிதரர், ‘வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டன’ என கண்டித்தார். அன்றைய தினம் இரவே அவர் அதிரடியாக மாற்றப்பட்டது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பலர், இன்னும் சிறையில் இரு்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி விசாரித்து வந்த டெல்லி போலீசார், 17,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.

அதில், ‘குற்றப் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டு இருப்பவர்கள், கடுமையான பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உதித் ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் போன்ற முக்கிய நபர்களின் பெயர்களும், குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கலவரம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

* மேலும் பல தலைவர்கள் பெயரை சேர்க்க முடிவு?
வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக விரைவில் துணை குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்யவும் டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில், மேலும் முக்கிய அரசியல் தலைவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என தெரிகிறது.


Tags : leaders ,Brinda Karat ,Salman Khurshid ,Delhi , Several leaders, including Salman Khurshid and Brinda Karat, have been charged in connection with the Delhi riots that killed 53 people: a 17,500-page chargesheet was filed.
× RELATED போரில் கொல்லப்பட்ட பெண்கள்...