அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்றால் பிடெனிடம் ஆட்சியை ஒப்படைப்பது சந்தேகம்: தபால் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கலாம்; உச்ச நீதிமன்றத்தை நாட போவதாக அறிவிப்பு

வாஷிங்டன்: ‘தபால் ஓட்டு முறையில் முறைகேடு நடக்க அதிக வாய்ப்புள்ளதால், அதிபர் தேர்தலில் ஒருவேளை தோல்வியடைந்தால், உச்ச நீதிமன்றத்தை நாடுவேன். அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் கைமாறாது. மாறாக, ஆட்சி தொடரும்,’ என்று அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது முறையாகவுமு், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இம்முறை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு முழுவதுமாக தபால் மூலமாக நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. கொலராடோ, ஹவாய், ஓரிகான், உட்டா, வாஷிங்டன் ஆகிய 5 மாகாணங்களில் மக்கள் ஏற்கனவே தபால் முறையில் வாக்களித்து வருகின்றனர். அடுத்ததாக கலிபோர்னியா, நியூ ஜெர்சி, நெவேடா, வெர்மோன்ட் உள்ளிட்ட மேலும் 4 மாகாணங்களில் தபால் முறையில்  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இரண்டாவது முறையாக வெற்றி பெறுவதற்கான முனைப்புடன் இருக்கும் டிரம்புக்கும், ஆட்சியை பிடிக்க துடிக்கும் ஜோ பிடெனுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும், பிடெனுக்கு சாதகமாக இருக்கின்றன. ஆனால், தேர்தலுக்கு இன்னும் 40 நாட்கள் இருப்பதால், கடைசி நேர மாறுதல்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாக்கு, இம்முறை முக்கிய பங்காற்றும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. ஒருவேளை, தேர்தலில் டிரம்ப் தோற்றால் பிடெனிடம் அவ்வளவு எளிதில் ஆட்சியை ஒப்படைத்து விட மாட்டார் என்ற கருத்து, கடந்த சில நாட்களாக பரபரப்பாக உலா வருகிறது. வெள்ளை மாளிகையில் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியின்போது, இது பற்றி நிருபர் ஒருவர் நேரடியாகவே கேள்வி எழுப்பினார். ‘லூயிஸ்வில்லி உள்பட பல்வேறு பகுதிகளில் கலவரம் நடந்து வருகிறது. ஒருவேளை அதிபர் தேர்தலில் நீங்கள் தோல்வி அடைந்தால், அமைதியான முறையில் ஆட்சி அதிகாரத்தை கை மாற்றுவீர்களா? என்று அந்த நிருபர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், ‘‘என்ன நடக்க போகிறது என்று பார்க்கத்தானே போகிறோம். தபால் முறை வாக்களிப்பில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று தொடர்ந்து கூறி வருகிறேன். இதனால், தேர்தலில் தோல்வியடைய நேர்ந்தால் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். வழக்கமாக, தபால் முறையில் வாக்களிக்கும் 5 மாகாணங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. புளோரிடா உள்ளிட்ட மாகாணத்தில், தபால் வாக்கு வேண்டும் என்று விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, அமைதியான ஆட்சி மாற்றம் இருக்காது; ஆட்சி தொடர்ச்சிதான் இருக்கும்,’’ என்றார். டிரம்ப்பின் இந்த கருத்து, ‘ஆட்சி மாற்றம் சமூகமாக இருக்காது’ என்ற கருத்தை பலப்படுத்தி இருக்கிறது. இதனால், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

* போலீசார் மீது துப்பாக்கிச்சூடு

கென்டக்கி மாகாணத்தில் லூயிஸ்வில்லி நகரில் வசிக்கும் ப்ரோனா டெய்லர் என்ற கருப்பினப் பெண்ணின் வீட்டிற்கு போதைப்பொருள் குறித்த விசாரணைக்காக போலீசார் சென்றனர். அப்போது அவரது காதலர், விசாரிக்க சென்ற போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தங்களை தற்காத்து கொள்ள போலீசார் பலமுறை சுட்டதில், ப்ரோனா இறந்தார். இதனைக் கண்டித்து நடந்த போராட்டத்தின் போது, மக்கள் தடுப்புகளை மீறி முன்னேற முயன்றதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு மக்கள் தரப்பில் இருந்தும் போலீசாரை நோக்கி சுட்டனர். இதில், `இரண்டு போலீசார் காயமடைந்தனர். ஒருவரது உடல்நிலை சீராக உள்ளது. மற்றொருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்,’ என்று லூயிஸ்வில்லி தலைமை காவலர் ராபர்ட் ஷ்ரோடர் கூறினார்.

* உய்குர் தயாரிப்புகளுக்கு இறக்குமதி தடை சட்டம்

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள பிரமாண்ட முகாம்களில் உய்குர் முஸ்லிம் மக்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இம்மக்களுக்கு எதிராக சீன அரசு அடக்குமுறையை கையாண்டு வருவதற்கும், இந்த இனத்தை அழிக்க அது முயற்சிப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த மக்களின் மனித உரிமை பறிக்கப்படுவதை கண்டிக்கும் வகையில், இந்த முகாம்களில் உய்குர் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை அமெரிக்க அரசு விதித்துள்ளது. இதற்கான சட்டம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பலத்துடன் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 406 வாக்குக்களும், எதிராக மூன்று வாக்குகளும் பதிவாகின.

Related Stories: