விழுப்புரம் அருகே கோலியனூரில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அம்மன் கோயில்குளம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற புத்துவாயம்மன் அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு சொந்தமான குளம் கோயிலின் எதிரே உள்ளது பழமை வாய்ந்த இந்த குளத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின்போது தெப்பல் உற்சவம் நடந்து வருகிறது. இந்த குளத்தைச் சுற்றிலும் கருங்கல் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் ஏராளமான மக்கள் இந்தக்குளத்தில் நீராடுவார்கள். தற்போது குளத்தில் தண்ணீர் முற்றிலும் வற்றிய நிலையில் குளத்தைச் சுற்றிலும் முள்செடிகள், கொடிகள் படர்ந்துள்ளது. குளம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், குளத்தினுள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சேர்ந்தும், குளக்கரையில் பலர் சூதாட்டம் ஆடியும், இரவு நேரங்களில் மது அருந்தியும் வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த குளத்திற்கு மழைக்காலம் தோறும் தொடர்ந்தனூர் ஏரியில் இருந்து வரும் நீர் வரத்து வாய்க்கால் மூலம் குயிலான்குட்டை, மாரியம்மன் கோவில் குட்டைகளுக்கு வந்து மழை நீர் சேகரமாகி வருகிறது. இதற்கான நீர் வரத்து வாய்க்கால் வழியில் அடைபட்டு கிடக்கிறது. ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் பணிகள் நடந்தும், முழுமையாக செய்யப்படாமல் ஆங்காங்கே வாய்க்கால் தூர்ந்து கிடக்கிறது. இதனால் முழு அளவில் மழை நீர் வராததால், குளத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளது. மேலும் இக்கோயில் விழுப்புரம் அறநிலையத்துறைக்கு உட்பட்டது.  குலத்தில் இந்த வருடம் ஜனவரி மாதம் தூர்வாரப்பட்ட நிலையில் அதன்பின்பு கோயில் குளத்தை சுற்றி புதர் மண்டி இருப்பதனால் அப்பகுதிகளில் சில சமூக விரோதிகள் மதுபானங்களை குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர்.

குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் உணவுக்காக வரும் கால்நடை விலங்குகள் பாட்டில் ஓடுகள் குத்தி  உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதுமட்டுமல்லாமல் குளத்தை தூர்வாரி பராமரித்தால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டும் உயரும் ஆகவே அரசு குளத்தை தூர்வாரி பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: