×

தமிழகத்தில் திமுக-காங். கூட்டணி வலுவாக உள்ளது: மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் புதிய மேலிட பொறுப்பாளர் இன்று சென்னை வந்ததையொட்டி, அவருக்கு விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய பாஜ அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து இன்று முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக நடத்தப்பட வேண்டிய போராட்டங்கள் குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று காலை சென்னை வந்தார்.

அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டங்கள் குறித்த நிருபர்கள் சந்திப்பு, சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. அப்போது, அவர் கூறியதாவது: மத்தியில் ஆளும் மோடி தலையிலான பாஜ அரசு ஜனநாயக விரோத போக்குடன் நடந்து வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்து வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. மாநிலங்களின் உரிமைகளை பறித்து அதிகாரங்களை மத்தியில் குவித்து வருகிறது.

புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, ஜிஎஸ்டி வரி என அனைத்திலும் மக்கள் கருத்து அறியாமல் மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் உள்ளது. இதனால் மாநிலங்கள், மத்திய அரசிடம் ைகயேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. தற்போது கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது. இவற்றை கொண்டு வருவது பற்றி மாநில அரசுகளிடமோ, விவசாய சங்கங்களிடமோ கருத்து கேட்கவில்லை. மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் செயலற்று போகும்.

மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானங்கள் முற்றிலுமாக நின்றுவிடும். எனவே தான் இந்த சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. இதன்படி ராஜ்பவனுக்கு பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து 28ம்தேதி போராட்டம் நடத்துகின்றன. அடுத்த கட்டமாக நாடு முழுவதும் 2 கோடி கையெழுத்துகளை பெற்று ஜனாதிபதியிடம், நேரு பிறந்த நாளான நவம்பர் 14ம்தேதி வழங்க திட்டமிட்டுள்ளோம். வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருந்தும் தமிழக அரசு அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசை எதிர்க்க தயங்குகிறது.

மோடி நாட்டையும், நாட்டின் சொத்துக்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், தனி நபர்களுக்கும் விற்று வருகிறார். தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் அமோக வெற்றி பெறும். இது உறுதி. காவிரி பிரச்னை என்பது இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்டது. எனவே அந்தந்த மாநில அரசுகள், மத்திய அரசு, காவிரி ஆணையம் ஆகியவை கலந்து பேசி சட்டரீதியாக தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு, தேசிய செய்தி  தொடர்பாளர் குஷ்பு, கே.ஆர்.ராமசாமி,

பீட்டர் அல்போன்ஸ் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், வீரபாண்டியன், ரூபி மனோகரன், இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சிரஞ்சீவி, நவீன், மாநில செய்தி தொடர்பாளர் பெனட் அந்தோணி ராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், ஓபிசி பிரிவு மாநில செயலாளர் ஹைஜா ஹபிபுல்லா, நாஞ்சில் பிரசாத், மயிலை தரணி உட்பட பலர் கலந்து ெகாண்டனர்.

Tags : Tamil Nadu ,Coalition ,Dinesh Kundurao , DMK-Cong in Tamil Nadu. Coalition is strong: Interview with Dinesh Kundurao
× RELATED பொதுமக்கள் வலியுறுத்தல் பணி...