ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய 500 திமிங்கலங்கள்!!.. உயிருக்கு போராடிய 70 மீன்களை மீட்ட ஆர்வலர்கள்!!!

சிட்னி:  ஆஸ்திரேலிய கடற்கரையில் சுமார் 500 திமிங்கலங்கள் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் 70 திமிங்கலங்களை ஆர்வலர்கள் காப்பாற்றி மீண்டும் கடலில் சேர்த்துள்ளனர். சுற்றுலாவுக்கு பெயர்பெற்ற ஆஸ்திரேலியாவின் தீவு மாநிலமான டாஸ்மானியாவில் சில நாட்களுக்கு முன் சுமார் 500 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. கடற்கரை மணலில் புதையுண்டதால் அவற்றில் 380 திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டன.

விவரம் அறிந்து டாஸ்மானியாவுக்கு விரைந்த மீனவர்களும், விலங்கின ஆர்வலர்களும் பெரும் போராட்டத்திற்கு பிறகு உயிர்பிழைக்க போராடிக்கொண்டிருந்த 70 திமிங்கலங்களை மீட்டு ஆழ்கடலுக்கு இழுத்து சென்று காப்பாற்றினர். பைலட் திமிங்கலமானது 7 மீட்டர் நீளம், 3 டன் எடை வரை வளரக்கூடியவை. இவை பெரும்பாலும் மந்தையாக வசிக்கும் தன்மை உடையவை. இதனால் எங்கு சென்றாலும் கூட்டம் கூட்டமாகத்தான் இடம்பெயரும். அவ்வாறு செல்லும் போது அவை ஆழமற்ற பகுதிகளில் சிக்கிவிடுவதுண்டு. இதனால் ஆய்வாளர்கள் திமிங்கலங்கள் கூட்டமாக செல்லும்போது அவற்றை முன் நின்று அழைத்து செல்லும் தலைமை திமிங்கலங்கள் வழி தவறி அனைத்து திமிங்கலங்களையும் எதிர்பாராத கரைப்பகுதிக்கு அழைத்து வந்திருக்கலாம் என கருதுகின்றனர்.

இதற்கிடையில் ஆழம் குறைந்த நீரில் தத்தளிக்கும் மேலும் 20 திமிங்கலங்களை காப்பாற்ற சுற்றுசூழல் ஆர்வலர்கள் இரவு பகலாக தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மானியா கடற்கரையின் மற்றொரு பகுதியில்  நூற்றுக்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருப்பதால் ஆர்வலர்களும், ஆஸ்திரேலிய கடலியல் துறை அதிகாரிகளும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: