×

குட்கா ஊழல் வழக்கில் பொதுநலனை காப்பாற்றும் வகையில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலைபொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கடந்த 2017ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதன்படி அவர்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது.

இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்எல்ஏக்களும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை காலத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, உரிமை மீறல் குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் செப்டம்பர் 14ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் வாதிடும்போது,‘‘கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் சட்டமன்றத்தில் அனுமதி பெற்று தான் ஸ்டாலின் இந்த விவகாரத்தை எழுப்பினார். குட்கா பொருட்களை காட்டி தடை செய்யப்பட்ட பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தினார். இதையடுத்து, ஆகஸ்ட் 28ம் தேதி ஸ்டாலின் உட்பட 21 எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீசை எதிர்த்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தடையை மீறி குட்கா வைத்திருந்தால் கூட அதை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டுமே தவிர உரிமைமீறல் பிரச்சனை எழுப்ப கூடாது எனக் கூறியுள்ளது. உரிமை மீறல் இல்லை எனக் கூறிய பின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார். மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘தடையை அமல்படுத்த வேண்டும் என்று தான் அதை சபையில் காட்டியதாக தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கம் இல்லை’என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இடைக்கால உத்தரவை வழங்கினார்.

உத்தரவில், சட்டப் பேரவை உரிமை மீறல் குழு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை இருக்கும். இந்த வழக்கில் பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் தர உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்து விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே தடைவிதித்து; தடை விதித்து நீதியை நிலைநாட்டியது. இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அநீதியைத் தழுவிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு, நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும் சூடு போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இப்போதும்  பெருமளவில் நடைபெற்று வருவதை “டைம்ஸ் ஆஃப் இந்தியா” அண்மையில் விரிவாக வெளியிட்டுள்ளது. குட்கா ஊழல் தொடர்பான விசாரணைகள் வேகமாக நடைபெற்று, பொதுநலனைக் காப்பாற்றும் வகையில், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Gujja ,MK Stalin , Justice must be upheld to protect the public interest in the Gujja corruption case: MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...