×

வடகிழக்கு டெல்லி கலவர வழக்கில் போலீசார் அதிரடி: 17,500 பக்கத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்; மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் பெயரும் சேர்ப்பு


புதுடெல்லி, : வடகிழக்கு டெல்லி கலவர வழக்கு தொடர்பாக சுமார் 17ஆயிரத்து 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ள டெல்லி போலீசார், அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வழக்கறிஞருமான சல்மான் குர்ஷித் பெயரையும் இணைத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த பிப்ரவரி 24ம் தேதி, வடகிழக்கு டெல்லி பகுதியான காஜியாபாத், சீலாலம்பூர் ஆகிய இடங்களில் மிகப்பெரிய அளவில் வகுப்புக் கலவரம் நடந்தது. இதில் சுமார் 53 பேர் பரிதாபமாக அடித்து கொல்லப்பட்டனர், மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து இந்த கலவரமானது நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப் இந்தியாவிற்கு வந்திருந்த அந்த நேரத்தில் வன்முறை நடந்ததால் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மேற்கண்ட கலவரம் தொடர்பாக டெல்லி போலீசார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நடைபெற்ற சம்பவம் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது கிடையாது. இது வன்முறையின் உட்சம் என்றும், பொதுமக்கள் இல்லாமல் அரசியல் பிரபலங்கள் சிலர் திட்டமிட்டே இந்த வன்முறையை பொறுப்பேற்று நடத்தினார்கள் என போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதில் குறிப்பாக வழக்கை விசாரித்த அப்போதைய உயர்நீதிமன்றம் நீதிபதி முரளிதரர், வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டது என கடுமையாக விமர்சனம் செய்ததால், இரவோடு இரவாக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் அந்த கட்சியில் நீக்கப்பட்டதோடு, தற்போது வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கலவரம் தொடர்பாக பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்த டெல்லி போலீசார். அதுகுறித்த 17 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தற்போது உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அதில், குற்றப்பத்திரிக்கைகளில் இருப்பவர்கள் கடுமையான பயங்கரவாத எதிர்ப்பு விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய நபர்கள் என போலீசார் தரப்பில் கடுமையாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக பிரபல வழக்கறிஞரும் ,மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித், அதேப்போல் மூத்த வக்கில் பிரசாந்த் பூஷன் ,தலைவர் உதித் ராஜ், பிருந்தா காரத் போன்ற பல பிரபலங்கள் பெயர்களும் போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் அனைவரும் கலவரம் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று வன்முறையை தூண்டும் விதமாகவும், அதற்கு ஆதரவாகவும் போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பாக உடனடியாக விரைவில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதுகுறித்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பல அரசியல் பிரமுகர்கள் பெயர்கள் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தற்போதைய குற்றப்பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட அனைவருக்கும் விளக்கம் கேட்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பும் என தெரியவருகிறது.Tags : Police action ,North East Delhi ,Salman Khurshid , Northeast, Delhi, Police, Vibration
× RELATED தடையை மீறி போராட்டம் நடத்தியதாக...