×

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்பு; பஞ்சாப் விவசாயிகள் ரயில் மறியல்: 28 ரயில்கள் ரத்து

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப்பில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிஷான் மஜ்தூர் சங்கரஷ் சார்பில் அமிர்தசரசில் விவசாயிகள் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று முதல் செப்டம்பர் 26 வரை விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா மற்றும் அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன.

இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வேளாண் மசோதாவை கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு எதிராக இன்று முதல் மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கம் (கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி) அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஒன்று திரண்டு தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ரயில் மறியல் போராட்டம் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் 26ம் தேதி வரை 28 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; சூழ்நிலைக்கு ஏற்ப சரக்கு ரயில்கள் இயக்கப்படும் என மண்டல ரெயில்வே மேலாளர் கூறினார். இதேபோல் பஞ்சாப் மாநிலத்தின் மற்றொரு விவசாய சங்கம், நாளை மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையே வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை தொடங்கி உள்ளது. அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற குழு தலைவர்கள் பேரணியாக சென்று கவர்னரிடம் மனு அளிக்க உள்ளனர். மசோதாக்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி 2 கோடி விவசாயிகளிடம் கையெழுத்து பெற்றுள்ளனர். இதற்கிடையில் தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகளும் வருகிற 28ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது குறிப்படத்தக்கது.

Tags : Punjab ,train strike , Strengthening opposition to the federal government's agriculture bill; Punjab farmers' train strike: 28 trains canceled
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து