×

10, 12ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை கேட்க அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம்: தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில் அக்டோபர் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. பாடங்கள் தொடர்பான சந்தேகங்கள் கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் முழுவதுமாக ஆன்லைன் முறைக்கு மாறிவிட்ட நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் வீடியோ முறையில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும் வீடியோ மற்றும் ஆன்லைன் மூலம் எடுக்கக்கூடிய பாடங்களின் தரமானது நேரடியாக வகுப்பில் கற்பதற்கு இணையாக இருக்காது என்று தொடர்ச்சியாக கல்வியாளர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

அதேவேளையில் மத்திய அரசும் செப்டம்பர் 21ம் தேதி முதல் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு சென்று பாடங்கள் தொடர்பான விளக்கங்களை பெறலாம் என்று ஏற்கனவே கூறியிருந்தது. இந்த முறை பல மாநிலங்களில் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது. அதன் வரிசையில் தமிழக அரசும் பொதுத்தேர்வு எழுதக்கூடிய10, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1ம் தேதி முதல் பள்ளிக்கு நேரடியாக சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. மாணவர்களை 2 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவாக பள்ளிகளுக்குள் அனுமதிக்கலாம் எனவும் 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.


Tags : teacher ,school ,announcement ,Government of Tamil Nadu , Lessons, Suspicion, Oct. 1, 10th, 12th class students, school, Government of Tamil Nadu
× RELATED கல்லூரி மாணவர்களின் வாக்காளர்...