×

ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை: ரஃபேல் விமான தொழில்நுட்பங்களை பிரான்ஸ் நிறுவனங்கள் இன்னும் இந்தியாவிற்கு வழங்கவில்லை: நாடாளுமன்றத்தில் சிஏஜி அறிக்கை.!!!

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த்தின் படி, இந்தியாவுக்கான உயர் தொழில்நுட்பங்களை டசால்ட், எம்பிடிஏ நிறுவனங்கள் இன்னும் வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடி செலவில் 36 அதிநவீன  ரஃபேல் போர் விமானங்களை வாங்க, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், முதல் விமானம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரான்ஸ் அரசு கடந்த ஆண்டு ஒப்படைத்தது. இதைத் தொடர்ந்து முதல்  கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சின் போர்டியக்ஸ் நகரில் உள்ள மெரிக்னாக் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி இந்தியா வந்தடைந்தன. தொடர்ந்து, ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் கடந்த 10-ம் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  5 ரஃபேல் போர் விமானங்கள் சர்வ மத பூஜைகளுடன் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.

இந்நிலையில், ரஃபேல் போர் விமானங்களை டசால்ட் நிறுவனம், எம்பிடிஏ நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்கியது தொடர்பான தணிக்கை அறிக்கையை சிஏஜி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில்,  2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டசால்ட் நிறுவனம், எம்பிடிஏ நிறுவனத்துடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 30 சதவீதம் உயர் தொழில்நுட்பங்களை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு (டிஆர்டிஓ) வழங்குவோம் எனக் கூறியிருந்தது. ஆனால், இதுவரை தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு வந்து சேரவில்லை.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான காவேரி எந்திரத்துக்கு பிரான்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த டிஆர்டிஓ அமைப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால், இன்றைய தேதி வரை இரு நிறுவனங்களும் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக எந்த உறுதியும் அளிக்கவில்லை. இந்தியத் தொழில்துறைக்கு இதுவரை வெளிநாட்டிலிருந்து எந்தவிதமான நிறுவனமும் தங்கள் தொழில்நுட்பங்களை வழங்கவில்லை. இதனால்தான் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் துறையில் பாதுகாப்புத்துறை 62-வது இடத்தில் இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தில் 30 சதவீதத்தை இந்தியாவில் செலவிட வேண்டும், அதாவது உதிரிபாகங்களை கொள்முதல் அல்லது, புதிய ஆராய்ச்சி மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த விதிமுறைகள் அனைத்தும் ரூ.300 கோடிக்கு மேல் கொள்முதல் செய்யப்படும் அனைத்து இறக்குமதிக்கும் பொருந்தும். இந்த வெளிநாட்டுக் கொள்கைகளை அந்நிய நேரடி முதலீடு, தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருதல், இந்திய நிறுவனங்கள் தயாரித்த பொருட்களைக் கொள்முதல் செய்தல் போன்றவை மூலம் செய்யப்பட வேண்டும்.

ஆனால், பிரான்ஸின் டசால்ட் நிறுவனமும், எம்பிடிஏ நிறுவனமும் இந்தியாவுடன் செய்திருந்த ஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை. தங்களின் உறுதிமொழியையும் காப்பாற்றவில்லை. பாதுகாப்பு அமைச்சகத்தின் வெளிநாடுகளுக்கான கொள்கைகள் எதிர்பார்த்த அளவுக்கு விளைவுகளைக் கொடுக்கவில்லை. ஆதலால், தங்களின் கொள்கைகளை மறு ஆய்வு செய்து மீண்டும் நடைமுறைப்படுத்தி, தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : companies ,French ,India ,Parliament. ,CAG , Not done as per agreement: French companies have not yet provided Rafale aircraft technologies to India: CAG report in Parliament !!!
× RELATED மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!!