×

ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட் பணம் திரும்ப வழங்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் டி.ஜி.சி.ஆர். தகவல்

டெல்லி: ஊரடங்கு காலத்தில் விமான பயணசீட்டு முன்பதிவு செய்திருந்த அனைவருக்கும் பணம் திரும்ப தரப்படும் என உச்சநீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. இதையடுத்து கடந்த மே 25ம் தேதி உள்நாட்டு விமான சேவைகள் துவங்கப்பட்டன. ஊரடங்கு குறித்து அறியாததால் விமான டிக்கெட்களை பலரும் முன்பதிவு செய்து வாங்கி இருந்தனர். அந்த டிக்கெட்டுகளுக்கு பலனில்லாமல் போனது. டிக்கெட் பணத்தை விமான நிறுவனங்கள் இதுவரை திரும்ப வழங்காமல் உள்ளன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணசீட்டுத்தொகையை முழுமையாக திருப்பி அனுப்பக்கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது பொது முடக்கத்துக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்ட விமான பயணசீட்டுக்கான தொகை சம்பந்தப்பட்ட பயணிகளின் பெயரில் வரவுகணக்கில் வைக்கப்படும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அந்த தொகையை பயணிகள் 2021 மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க காலத்தின் போது முன்பதிவு செய்யப்பட்ட பயணசீட்டுக்கான தொகை முழுவதும் திரும்ப அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து தேவை பிரிவு முடிவெடுக்கும் எனவும், நீதிமன்றத்தில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியுள்ளது.


Tags : curfew ,DGCR , Curfew, Booking, Air Ticket Payment, Supreme Court, DGCR
× RELATED ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்