×

மின்தடை காரணமாக ஆக்சிஜன் பற்றாக்குறை திருப்பூர் அரசு மருத்துவமனையில் மூச்சுதிணறி மேலும் ஒரு பெண் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

திருப்பூர்: திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் மின்சாரம் இல்லாததால் மேலும் ஒரு பெண் மூச்சுத்திணறி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் பூலுவப்பட்டி மும்மூர்த்தி நகரை சேர்ந்தவர் தெய்வமணி. இவரது மனைவி அனுராதா (45). இவர்களுக்கு மீனாட்சி, கோமதி, வித்யா என மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். அனுராதா பனியன் நிறுவனத்தின் வேலை பார்த்து வந்தார். கடந்த 16ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில், மின்சாரம் இல்லாத காரணத்தால், மூச்சுத்திணறி இறந்ததாக புகார் தெரிவித்து, அவரது மகள் மீனாட்சி, உறவினர்களுடன் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘‘எனது தாய்க்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 22ம் தேதி காலை மின்தடை ஏற்பட்டதால், செயற்கை சுவாச கருவி செயல்படவில்லை. இதனால், கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். ஆகவே, மின்தடை காரணமாக உயிரிழந்தவர்களில் எனது தாயையும் கருத்தில் கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறுகையில், ‘கொரோனா வார்டில் மின் தடை ஏற்பட்ட போதிலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தடை ஏற்படவில்லை. நேற்று முன்தினம் பலியான  67 வயது பெண்ணிற்கு சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு இருந்தது. 59 வயது ஆணுக்கும் ரத்தக் கொதிப்பு மற்றும் நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. இதனால், அவர்களுக்கு நோயின் தாக்கம் அதிகரித்து இறந்துள்ளனர்’ என்று கூறினார். ஏற்கனவே, மின்தடை காரணமாக நேற்று முன்தினம் இருவர் இறந்தனர். தற்போது, மீண்டும் ஒரு பெண் இறந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

Tags : government hospital ,Tirupur , Another woman dies of suffocation at Tirupur Government Hospital due to lack of oxygen due to blackout: Death toll rises to 3
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...