×

பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற சலூன்கடைக்காரர் மீது கந்துவட்டி வழக்கு: மதுரையில் பரபரப்பு

மதுரை: பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது, கந்துவட்டி சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரை, மேலமடையை சேர்ந்தவர் மோகன். சலூன் கடை உரிமையாளர். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை பயன்படுத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக, பிரதமர் மோடியிடம் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் பாஜவிலும் இணைத்துக்கொண்டார்.

இந்நிலையில், மதுரை அன்பு நகரை சேர்ந்த கங்கைராஜன் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில், கடந்த 13ம் தேதி புகார் மனு கொடுத்தார். அதில், ‘‘மருத்துவச் செலவுக்காக பாஜவை சேர்ந்த மோகனிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினேன். அதற்கு வட்டியுடன் ரூ.70 ஆயிரம் வரை திரும்ப செலுத்திவிட்டேன். தற்போது மோகன் மேலும் வட்டி கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டுகிறார்’’ என தெரிவித்திருந்தார். இதன் பேரில் போலீசார், மோகன் மீது நேற்று முன்தினம் கந்துவட்டி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரதமரால் பாராட்டப்பட்டவர் மீது, கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : salon shopkeeper ,Modi ,Madurai , Kantuvatti case against salon shopkeeper who praised Prime Minister Modi: a stir in Madurai
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...