உடுமலையில் பட்டப்பகலில் துணிகரம் அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்தி நகை, மோதிரம் பறிப்பு: தப்பி ஒடிய கும்பலுக்கு போலீஸ் வலை

உடுமலை: உடுமலையில், எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அமைச்சரின் உதவியாளர் பட்டப்பகலில் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில், கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் சட்டமன்ற அலுவலகம் அன்சாரி வீதி, வ.உ.சி. வீதி இணையும் பகுதியில் உள்ளது. மடத்துக்குளம் தாந்தோணி கிராமத்தை சேர்ந்த கர்ணன் (33) என்பவர் அமைச்சரின் உதவியாளராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் கர்ணனும், டைபிஸ்ட் ஒருவரும் அலுவலகத்தில் இருந்தனர். 11.30 மணி அளவில் அலுவலகம் முன்பு கார் ஒன்று வந்து நின்றது.

காரில் இருந்து இறங்கிய 4 பேரில் 3 பேர் அலுவலகத்திற்குள் சென்றனர். வெளியே ஒருவர் ஆட்களை நோட்டமிட்டபடி நின்றிருந்தார். கார் டிரைவர் சீட்டில்  தயாராக அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் கர்ணனை கத்திமுனையில் அந்தக் கும்பல் தரதரவென இழுத்து சென்று, காருக்குள் தள்ளி காரை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றது. முன்னதாக, அலுவலகத்திற்குள் டைபிஸ்ட் அறையை பூட்டிச் சென்றது. சற்றுநேரத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வந்த அ.தி.மு.க.வினர், சம்பவம் குறித்து கேட்டறிந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்த்து உடனடியாக மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து காரை பிடிக்கும்படி உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உடுமலையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள தளி பகுதியில் வசிக்கும் அ.தி.மு.க. பிரமுகர் குமரவேல் வீட்டில் கர்ணன் தஞ்சம் புகுந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தளி நோக்கி விரைந்தனர். எஸ்பி. திஷாமிட்டல், உடுமலை டி.எஸ்பி. ரவிக்குமார் மற்றும் போலீசார் தளியில் தஞ்சமடைந்த கர்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தன்னை 5 பேர் கும்பல் கத்தி மற்றும் துப்பாக்கியை காட்டி காரில் கடத்தி சென்றதாகவும், செல்லும் வழியில் பணம் கேட்டு மிரட்டியதாகவும், கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி, ஒரு பவுன் மோதிரம் மற்றும் 2 செல்போன்களை பறித்துவிட்டு வாளவாடி பிரிவு என்ற பகுதியில் இறக்கிவிட்டு தப்பியதாகவும் வாளவாடி பிரிவில் இருந்து தளி வரை பைக்கில் லிப்ட் கேட்டு வந்ததாகவும் கர்ணன் கூறினார்.

மேலும், கடத்தல் கும்பலில் இருந்தவர்கள் கொங்கு தமிழில் பேசியதாகவும், மீண்டும் அவர்களை கண்டால் அடையாளம் காட்ட முடியும் என்றும், காரில் கடத்தியபோது கண்களை கட்டி நகருக்குள் பல்வேறு இடங்களில் சுற்றியதாகவும், வாளவாடி பகுதியில் உள்ள குடோன் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும் கர்ணன் தெரிவித்தார். இதையடுத்து, சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் சட்டமன்ற அலுவலகத்துக்குள் புகுந்து அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: