×

விவசாயத் தொழிலாளர் அணி பட்டியலிடப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார்: மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: திமுக விவசாய - விவசாயத் தொழிலாளர் அணியால் பட்டியலிடப்பட்டுள்ள மத்திய பாஜ அரசின் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதல்வர் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: குடிமராமத்துத் திட்டத்தில் ஊழல், விவசாயிகளுக்கும் தண்ணீர் வழங்கும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல் - மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் கூட லட்சக்கணக்கான போலிகளைச் சேர்த்து நிதியைச் சுரண்டிய அதிமுக ஆட்சியின் முதல்வர் பழனிசாமிக்கு “விவசாயி” என்று சொல்லிக்கொள்ள எந்தவிதத் தார்மீக உரிமையும் கிடையாது. ஒரு விவசாயி என்பவர், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரிக்க மாட்டார்.

விவசாயிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களின் விளைபொருட்களுக்கு அதிக விலை கேட்டுப் போராடினாலும், குறைந்தபட்ச ஆதார விலையையாவது கொடுங்கள் என்பதுதான் அவர்களின் தவிப்பாக இருக்கிறது. அந்த குறைந்தபட்ச ஆதார விலை என்ற வார்த்தையே இல்லாத வேளாண் சட்டங்களை இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்து விட்டு அந்த வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் பேசியும் வருகிறார் என்றால் அவர் உண்மையிலேயே விவசாயியா? முதல்வர் பழனிசாமி ஆதரிக்க உத்தரவிட்ட இந்த வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை அதாவது எம்.எஸ்.பி என்ற ஒரேயொரு சொற்றொடரை எங்கேயாவது கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாவிட்டால், விவசாயிகளிடம் இரு கைகூப்பி மன்னிப்பு கேட்பாரா?

விவசாயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது. இவருக்கு அந்த அடிப்படை இயல்புகள் இல்லை அல்லது குறைவு என்றால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இந்தச் சட்டங்களை எதிர்த்து அதிமுக உறுப்பினர்  எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் மாநிலங்கள் அவையில் பேசினாரே அவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாததால் தான் அப்படிப் பேசினாரா?

இந்தச் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் அன்று கோட்டையை முற்றுகையிடப் போனார்களே அவர்கள் எல்லாம் விவசாயிகள் விவசாயத்தைப் பற்றி அறிந்தவர்கள்என்று நினைத்துப் பார்க்கவில்லையா முதலமைச்சர் பழனிசாமி? இந்த சட்டங்களை எதிர்த்து சிரோமணி அகாலி தள அமைச்சர் ஒருவர் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்திருக்கிறாரே அவர் விவசாயத்தைப் பற்றி எதுவும் தெரியாததால்தான் ராஜிநாமா செய்தாரா? மத்திய பாஜக அரசின் இந்தச் சட்டங்கள், கொள்முதல் கட்டமைப்பை அழித்து விடும் விவசாயிகளைத் தனியார் கைகளுக்குத் தள்ளிவிடும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று இந்தச் சட்டங்களை எதிர்க்கும் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் சொல்லியிருக்கிறாரே அவருக்கும் விவசாயத்தைப்பற்றி எதுவும் தெரியாதா?

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், இடதுசாரிக் கட்சிகள், திமுக உள்ளிட்ட இந்தியாவின் 18 அரசியல் கட்சிகள், இந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று, இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனவே அவர்கள் அனைவருக்கும் விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதா? விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்ற உறுதிமொழி பொய்யானது” என்று, இந்தச் சட்டங்களை எதிர்த்துக் குற்றம்சாட்டியிருக்கும் அகில இந்திய விவசாயிகளின் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது என்கிறாரா எடப்பாடி பழனிசாமி?

‘எல்லாம் எனக்குத் தெரியும் என்னை எதிர்ப்போர்க்கு எதுவும் தெரியாது’’ என்று நினைப்பதும், பேசுவதும், ஆணவத்தின் அடையாளம் அழிவின் ஆரம்பம் என்ற ஆன்றோர் அறிவுரையை, எடப்பாடி பழனிசாமி எண்ணிப் பார்க்க வேண்டும்.
திமுக விவசாய விவசாயத் தொழிலாளர் அணியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முழுப்பக்க விளம்பரத்தில் விவசாயிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏராளமானோர் எதிர்க்கும் வேளாண் சட்டங்களை பாஜ அரசுக்கு பணிந்து பணிந்து ஆதரித்த முதல்வர் பழனிசாமி பட்டியலிடப்பட்டுள்ள பாதிப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், மாநில உரிமைகளுக்கு எதிரானவை என்ற அடிப்படையில், கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. கேரள அரசு, மாநில உரிமைகளை மதித்துப் போற்றிப் பாதுகாத்திடப் பாடுபடும் அரசு, வேளாண் சட்டங்களில் பொதிந்துள்ள விபரீதத்தை விளங்கிக் கொண்டுள்ள அரசு. இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே? எடப்பாடி அரசு, அது மாநில உரிமைகளைப் பற்றிய உணர்ச்சியே இல்லாத அரசு. சொந்த நலனைத் தவிர, வேறு எதுகுறித்தும் சுரணை இல்லாத அரசு. விவசாயிகளைப் பற்றியோ, வேளாண் சட்டங்களினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ, துளியும் கவலைப்படத் துப்பில்லாத அரசு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Chief Minister ,Team ,MK Stalin ,Agricultural Workers , What is the Chief Minister's response to the effects of the agricultural laws listed by the Agricultural Workers' Team: MK Stalin
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...