×

பிரதமர் மோடி கூட 6 முறை மரபு விதியை மீறி இருக்கிறார்: சர்ச்சைக்குரிய கேரள அமைச்சர் ஜலீல் ஆவேசம்

திருவனந்தபுரம்: ‘பிரதமர் மோடி 6 முறை மரபுகளை மீறி செயல்பட்டுள்ளார்,’ என்று கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் ஜலீல் குற்றம்சாட்டி உள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலமாக கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை கடத்திய சொப்னா கும்பல் சிக்கியுள்ளது. இவருடன் தொடர்பு  வைத்திருந்த காரணத்துக்காக, கேரள உயர்கல்வி அமைச்சர் ஜலீலும் சிக்கலில் மாட்டியுள்ளார். தூதரகம் மூலமாக இஸ்லாமிய மதநூல் வந்தபோது, அதனுடன் சொப்னா கும்பல் கடத்திய தங்கமும் எடுத்து வரப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் தொடர்புடைய ஜலீலை, பதவி விலக வலியுறுத்தி கடந்த 2 வாரமாக எதிர்க்கட்சியினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பற்றி ஜலீலிடம் அமலாக்கத் துறையும், என்ஐஏ.வும் விசாரணை நடத்தி உள்ளன.

இந்நிலையில், அமைச்சர் ஜலீல் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இஸ்லாமிய மதநூல் வந்த பார்சலில் தங்கம் உள்பட எந்த பொருட்களும் கடத்தப்படவில்லை. முஸ்லிம் லீக் கட்சிதான் தேவையில்லாமல் இந்த பொய் புகாரை கூறி வருகிறது. நான் வெளியுறவுவிதிமுறைகளை மீறியதாக கூறுகின்றனர். ஆனால், பிரதமர் மோடியே பலமுறை மரபுகளை மீறி உள்ளார். பாகிஸ்தான் பிரதமரின் பிறந்த நாளுக்காக எந்த முன்னறிவிப்பும் இன்றி அந்த நாட்டுக்கு மோடி சென்றார். இதே போன்று பிரதமர் 6 முறை மரபுகளை மீறியுள்ளார். நாட்டின் சட்டப்படி ஒரு பிரதமர் வெளிநாடு செல்லும்போது மரபுகளை பின்பற்ற வேண்டும். ஆனால், அதை மீறி அவர் வெளிநாட்டுக்கு சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.

* ராஜினாமா செய்ய தயார்
ஜலீல் தனது பேட்டியில், ‘‘தங்க கடத்தலுக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது தொடர்பாக யாரிடம் இருந்தும் நான் பரிசோ, பணமோ வாங்கவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, பதவி விலக வேண்டிய அவசியம்  இல்லை. ஆனால், கட்சி கேட்டுக்கொண்டால் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்,’’ என்றும் கூறினார்.

* தூதருடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி?
அமைச்சர் ஜலீல் மேலும் கூறுகையில், ‘‘ஷார்ஜா மன்னர் கேரளா வந்தபோது, அமைச்சர் என்ற முறையில் அவருடைய விழாவில் பங்கேற்றேன். அப்போது, ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதர் ஜமால் உசேன் அல்சாபியுடன் பழக்கம்  ஏற்பட்டது. அன்று முதல் நான் அவருடன் தொடர்பில் இருந்து வருகிறேன். விழா மற்றும் பண்டிகை காலங்களில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது உண்டு. தற்போது பிரச்னை ஏற்பட்டதில் இருந்து அவரை நான் தொடர்பு கொள்வதில்லை,’’ என்றார்.

Tags : Modi ,Jalil Awesam , Even Prime Minister Modi has violated the rule of law 6 times: Controversial Kerala Minister Jalil Awesam
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...