உதவி கமிஷனர் பெயரில் போலி பேஸ்புக் ஐடி மூலம் பணம் பறிப்பு: மர்ம நபர்களை நெருங்க முடியாமல் போலீஸ் தவிப்பு

சென்னை: எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் பெயரில் போலி பேஸ்புக் முகவரி தொடங்கி பல லட்சம் கொரோனா நிதியை சுருட்டிய மோசடி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தமிழக காவல் துறையில் கூடுதல் டிஜிபி ரவி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன் என 10க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் என பலரது பெயர்களில் புகைப்படத்துடன் பேஸ்புக் கணக்கு தொடங்கி, அதில் கொரோனா நிதி என்று நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் என 20க்கும் மேற்பட்டோர் சைபர் க்ரைம் பிரிவில் அடுத்தடுத்து புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த மோசடி பேர்வழிகள் ராஜஸ்தான் மற்றும் ஒடிசா மாநிலங்களில் இருந்து கைவரிசை காட்டுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சைபர் குற்றவாளிகளை பிடிக்க டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை எழும்பூர் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் பெயரில் புகைப்படத்துடன் பேஸ்புக் பக்கத்தில் கணக்கு தொடங்கி கொரோனா நிதி என்று அவரது நண்பர்கள் மற்றும் தொழிலதிபர்களிடம் பல லட்சம் வரை பணம் பெற்று மோசடி நடந்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.இதையடுத்து உதவி கமிஷனர் சுப்பிரமணியன் சம்பவம் குறித்து உரிய ஆதாரங்களுடன் சைபர் க்ரைம் பிரிவில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார். அதன்படி சைபர் க்ரைம் போலீசார் மோசடி நபர்களை தேடி வருகின்றனர். தமிழக காவல் துறையில் புயலை கிளப்பி வரும் சைபர் குற்றவாளிகளால் உயர் காவல் துறை அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories:

>