கவர்னருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு அதிமுகவுடன் சசிகலாவை இணைப்பதில் பாஜ மத்தியஸ்தம் செய்யவில்லை: எல்.முருகன் பேட்டி

சென்னை: பாஜ எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தை அலங்கரிப்பது நிச்சயம் என்று கூறிய எல்.முருகன், அதிமுக உடன் சசிகலாவை இணைப்பதில் பாஜ மத்தியஸ்தம் செய்யவில்லை என்றார். தமிழக பாஜ மகளிரணி செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மகளிரணி மாநில தலைவர் மீனாட்சி நித்தியசுந்தர் தலைமை வகித்தார். தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். தேசிய பாஜ மகளிரணி தலைவர் விஜய ரஹோத்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘பண்டித தீனதயாள் உபாத்யாய வாழ்வில் நூறு வசீகரமூட்டும் சம்பவங்கள்’ எனும் நூலை வெளியிட்டார்.

கூட்டத்தில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் பேசுகையில், ‘‘தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மீது பெண்கள் அதீத பற்றும், பாசமும் கொண்டிருந்தனர். அதே பாசமும், பற்றும் இன்றைக்கு பிரதமர் மோடி மீது பெண்கள் வைத்திருக்கிறார்கள். கந்தர் சஷ்டி கவசத்தை அவதூறாக பேசிய கருப்பர் கூட்டத்தை இந்த காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டியடிப்பார்கள். மகளிர் சக்தியால் எதுவுமே சாத்தியம் தான். சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. குறிப்பாக கன்னியாகுமரி இடைத்தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் நாம் பெரும் வெற்றியானது தமிழகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும். நிச்சயம் இந்தமுறை தமிழக சட்டமன்றத்தை நமது எம்எல்ஏக்கள் அலங்கரிப்பார்கள்’’ என்றார்.

பின்னர், எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னரை நான் சந்தித்ததில் எந்த வித அரசியல் நோக்கமும் இல்லை. நாங்கள் அரசியலும் பேசவில்லை. அவர் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கத் தான் சென்றேன். ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் இது. சசிகலாவை மீண்டும் அதிமுக உடன் இணைக்க மத்திய பாஜ கட்சி மத்தியஸ்தம் செய்வதாக நீங்கள் கேட்கிறீர்கள். அப்படி எதுவும் இல்லை. தமிழக பாஜ, அதிமுக உடனான கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை. சுமூகமாக செல்கிறது. மத்திய அரசு எந்த சட்ட திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை கண்மூடித்தனமாக திமுக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: