தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சியா? அரசுக்கு அன்புமணி கேள்வி

சென்னை: தர்மபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான்  தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்ற நிலை ஏற்படும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ரூ.14,000 கோடி மதிப்பிலான காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம் என்பதைதான் புரிந்துகொள்ள முடியவில்லை.

தர்மபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள்  உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர் திட்டப் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1,230 நீர்நிலைகளிலும் நிரப்புவதுதான் தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும்தான் தேவைப்படும். காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும்.

அதை கருத்தில் கொண்டுதான் காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தர்மபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களை முன்னேற்ற ஏதேனும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால்தான் தமிழகத்தில் நடப்பது வளர்ச்சிக்கான ஆட்சி என்று போற்றப்படும். எனவே, தர்மபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதலமைச்சர் பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: