பட்டப்பகலில் ஸ்டுடியோவுக்குள் புகுந்து போட்டோ கிராபர் சரமாரி வெட்டி கொலை

மர்மநபர்களுக்கு வலை

திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில், பட்டப்பகலில் ஸ்டூடியோவுக்குள் நுழைந்த மர்மநபர்கள், சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கொலை நடந்ததா, கள்ள தொடர்பு காரணமா, தொழில்போட்டியா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.  திருவள்ளூர் அடுத்த காக்களூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி அனிதா (26). காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் தினேஷ், ஸ்டூடியோவில் இருந்தார். அப்போது, திடீரென அங்கு வந்த 4 பேர், மறைத்து வைத்திருந்த அரிவாளால், தினேஷின் கழுத்து, தலை உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர், இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவலறிந்து திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 மாதங்களாக பிரிந்துள்ளதால், அனிதா தரப்பில் கொலை நடந்ததா, தினேஷுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டு கொலை நடந்ததா, தொழில்போட்டியா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>