×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு: மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் ஓம் பிர்லா.!!!

டெல்லி: நாடாளுமன்ற மக்களவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி வரும் அக். 1ம் தேதி  வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு சபைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறையின்றி இரு அவைகளும் செயல்பட்டன. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி,  எம்பிக்கள் தனி மனித இடைவெளியை கடைப்பிடித்து கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

அதேபோல், நாடாளுமன்ற அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் தினந்தோறும் துரித ஆன்டிஜன் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் ஆக்கப்பட்டது. இருந்தும், 25க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி  உள்ளது. இதற்கிடையே, வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்ட போது மாநிலங்களவை துணை தலைவர் ஹர்வன்சை முற்றுகையிட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து  எதிர்க்கட்சிகள் நேற்று முதல் அவையை புறக்கணித்துள்ளன. கொரோனா பரவல் மற்றும் எம்பிக்கள் அவை புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் அக். 1ம் தேதி முடிய வேண்டிய கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்து விட மத்திய அரசு  திட்டமிட்டது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்திய ஆலோசனையின்போது, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவை இன்று மதியம் 1 மணிக்கு அவை நேரம் முடிவடைந்ததும் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அவையில், தெரிவிக்கையில், திட்டமிட்ட  அமர்வுக்கு முன்னதாக மாநிலங்களவை கூட்டத்தொடர் முடிவடைந்துள்ளது. மொத்தம் உள்ள 10 அமர்வுகளில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றார்.

இதனை தொடர்ந்து, மக்களவையையும் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். மக்களவையில், ஆளும் தரப்பு எம்பிக்களைத் தவிர, ஒய்எஸ்ஆர், அதிமுக உள்ளிட்ட கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். மக்களவையில்  நிறைவேற்றப்பட்ட ஏழு மசோதாக்கள், குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொரு மசோதாவுக்கும் சில நிமிடங்கள் மட்டும் விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Closing ,Om Birla ,monsoon session ,Parliament ,Lok Sabha , Parliamentary monsoon session ends: Speaker Om Birla adjourns Lok Sabha without specifying a date !!!
× RELATED மக்களவை தலைவர் ஓம் பிர்லா தந்தை மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்