'ஒரே நாடு..ஒரே ரேஷன்'திட்டத்தை அக்., 1 முதல் செயல்படுத்த தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனை!!.. துணை முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு!!!

சென்னை:  ஒரே நாடு..ஒரே ரேஷன் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உணவு மற்றும் பாதுக்காப்புத்துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். இவற்றில் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஒரே நாடு..ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஒரு சில மாநிலங்களில் இதனை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக திட்டமானது செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரே குடும்ப அட்டை மூலமாக பொருட்களை பயன்படுத்தும் திட்டமானது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் முன்னுதாரணமாக பயன்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரே நாடு..ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த இன்றைய தினம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டமானது நடத்தப்பட்டது.

இதையடுத்து ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளும் செயல்பட்டுள்ளது. இதுகுறித்தும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் கேட்டறிந்தார். இதற்கிடையில் அக்டோபர் 1 ம் தேதி முதல் இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சில நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தார். தற்போது அதில் இருக்கக்கூடிய சாதக பாதக அம்சங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். பின்னர், இதுதொடர்பான ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் பயோமெட்ரிக் முறையிலேயே பல்வேறு சிக்கல்கள் பல மாவட்டங்களில் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாடு..ஒரே ரேஷன் திட்டம் மூலம் பிற மாநிலங்களிலிருந்து தங்கி வேலை செய்பவர்களும் பொருட்களை வாங்கி செல்லலாம். எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு முதல்வர் எடப்பாடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: