×

தமிழ்நாடு இல்லத்தில் கதிர் ஆனந்த் எம்.பியை மிரட்டியது யார்? டெல்லி போலீஸ் விசாரணையை தொடங்கியது

புதுடெல்லி:கதிர் ஆனந்த் எம்.பியை மிரட்டியது யார்? என்று டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மக்களவையில் நேற்று பேசிய வேலூர் திமுக எம்.பி கதிர் ஆனந்த், சபாநாயகர் ஓம்.பிர்லாவிடம் ஒரு புகாரை தெரிவித்திருந்தார். அதில் உளவுத்துறையினர் என சொல்லி அடையாளம் தெரியாத இருநபர்கள்  தான் தங்கியிருந்த  தமிழ்நாடு இல்லத்திற்கு வந்து சம்பந்தமில்லாமல் என்னை மிரட்டினார்கள். குறிப்பாக திமுகவின் செயல்பாடு மக்களவையில் என்ன? மேலும் எதைப்பற்றி பேசப்போகிறீர்கள் என கேட்டனர்.  
ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்? என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து அவரது புகாரை பதிவு செய்து கொண்டு இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இதை டெல்லி காவல் நிலையத்திலும் எம்.பி கதிர்ஆனந்த் பதிவு செய்திருந்தார். இதை தொடர்ந்து நேற்று மாலை டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இன்று காலை தமிழ்நாடு இல்லம் இருக்கும் பகுதிக்குட்பட்ட  காவல் நிலையத்தில் இருந்து சென்ற காவல்துறையினர்  கதிர்ஆனந்த் எம்.பி அளித்த புகாரை  அடிப்படையாக கொண்டு விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். அதில் எம்.பி கதிர்ஆனந்தை மிரட்டியது யார்? வந்தது உளவுத்துறை  அதிகாரிகள் தானா? அல்லது வேறுயாராவது அத்தகைய பெயரை சொல்லி உள்ளே நுழைந்தார்களா?, அரசு இல்லத்தில் தனி நபர் சாதாரணமாக வந்தது எப்படி? என பல கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதைப்போல் தமிழ்நாடு இல்லத்தில் உள்ள வருகை பதிவேடு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை வைத்து கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை யாரெல்லாம் வந்து சென்றனர் என்ற கோணத்தில் விசாரணை  நடத்திவருகின்றனர்.
இதையடுத்து கதிர்ஆனந்த் எம்பியை மிரட்டியது யார் என்பதுவிரைவில் தெரியவரும். இதில் முன்னதாக போலீசார் எங்களிடம் அத்துமீறி நடந்து கொள்கின்றனர் என்று காங்கிரஸ் கட்சியினர் மக்களவையில் புகார் அளித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Kathir Anand MP ,House ,Tamil Nadu ,investigation ,Delhi Police , Kathir Anand MP, Delhi, Police, Investigation,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்