×

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை: கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.!!!

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து 2017-ல் உச்சநீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா 2021 ஜன., 27ல் விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாதபட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த 20-ம்  தேதி திடீரென டெல்லி பயணம் சென்றார். சசிகலா விடுதலை தொடர்பாக  நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த சென்றதாக கூறப்பட்டது. ஆனால், சசிகலாவை  மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து டிடிவி தினகரன்-பாஜக இடையே  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லிக்கு  சென்றுள்ள டிடிவி தினகரன் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்ததாகவும்  சொல்லப்படுகிறது. ஒருங்கிணைந்த அதிமுகவை தேர்தலுக்கு முன் கட்டமைக்க  வேண்டும் என பாஜக நினைப்பதாகவும், அப்போது தான் தேர்தலில் திமுகவை  எதிர்க்கொள்ள முடியும் என்ற நிலைபாட்டிற்கு பாஜக வந்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கான பணிகளையும்,  அதிமுகவுடன் சமரசத்தில் ஈடுபடுவதற்கான முன்னெடுப்புகளை பாஜக செய்து  வருவதாக சொல்லப்படுகிறது. பாஜகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது,  சசிகலாவிற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியும், தனக்கு முக்கிய  பொறுப்பையும் கேட்டுள்ள கூறப்படுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஆட்சி அதிகாரம் இருக்கும் என்றும், கட்சியை வழிநடத்தும் பொறுப்பு சசிகலாவிடம் செல்லும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலுடன் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திடீரென சந்தித்து பேசினார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எல்.முருகன், மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்து உடல்நிலையை விசாதித்தேன் என்றார். சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது தொடர்பாக பாஜக மத்தியஸ்தம் செய்யவில்லை என்று தெரிவித்தார்.


Tags : BJP ,L Murugan ,AIADMK ,Sasikala , BJP does not mediate to reunite Sasikala with AIADMK: Interview with state president L Murugan
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...