கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் நேற்று கேரளாவுக்கு காரில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில மாதமாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வந்தது. பல்லடம் ரோடு பகுதியில் வாகன சோதனை செய்வதற்காக போலீசார் நின்றாலும், முறையாக கண்காணிப்பதில்லை என்ற புகார் எழுந்தது. தொடர் புகாரையடுத்து நேற்று காலையில், பல்லடம்ரோடு நியூஸ்கீம்ரோடு சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்தி நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்த டிரைவர் உள்பட இருவரும், முன்ணுக்கு பின் முரணான பதில் அளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்த காரின் பின் பகுதி முழுவதும், சுமார் 10க்கும் மேற்பட்ட  மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

அதனை பிரித்து பார்த்தபோது அரிசி இருந்துள்ளது. அந்நேரத்தில், காரில் இருந்த இருவரும் தப்பியோட முயன்றனர். உடன் போலீசார் அவர்களை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு விரட்டி பிடித்ததாக கூறப்படுகிறது. விசாரணையில் அவர்கள், மாப்பிளைகவுண்டன்புதூரை சேர்ந்த விஜயன், சாதிக் என்பதும். அவர்கள் கேரளாவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, காருடன் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>