×

கொண்டாநகரத்தில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி தீவிரம்

பேட்டை: தென்காசி, விருதுநகர் மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடந்து வரும் சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. டிசம்பருக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்கச் செய்யும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி., நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது. இந்த 3 மாவட்டங்களிலும் தற்போது பெருகியுள்ள மக்கள் தொகைக்கேற்ப, பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீரை சீராக வழங்குவது இயலாத காரியமாக உள்ளது. இதையடுத்து நெல்லை மாநகருக்கு அரியநாயகிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதேபோல் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சி, புளியங்குடி நகராட்சி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ராஜபாளையம், திருத்தங்கல், விருதுநகர் ஆகிய நகராட்சிகளில் வசிக்கும் சுமார் 7 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.543.20 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2017 டிசம்பரில் துவங்கப்பட்டு 2020 செப்டம்பரில் நிறைவுபெறும் வகையில் திட்டம் வரையறுக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக இத்திட்டப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு 85 சதவீத பணிகளே நிறைவு பெற்றுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முழுவீச்சில் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இந்த குடிநீர் திட்டத்திற்காக நெல்லை சுத்தமல்லியை அடுத்த கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு அங்கிருந்து பம்பிங் செய்யப்படும் தண்ணீர், கொண்டாநகரம் ரயில்வே கேட் அருகே அமைக்கப்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இங்கு தினமும் 46.08 எம்எல்டி குடிநீர் ஏரேட்டர், ஸ்டில்ங் சேம்பர், டிவைடிங் சேம்பர், பிளஸ் மிக்ஸர், பில்டர் ஹவுஸ் ஆகிய நிலையில் சுத்திகரிக்கப்பட்டு சம்பில் சேமிக்கப்படுகிறது. பின்னர் பம்பிங் செய்யப்பட்டு 2 மாவட்ட பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது. இதற்காக நெல்லை அடுத்த கொண்டாநகரத்தில் இருந்து 66 கி.மீ தொலைவிற்கு 91.4 செமீ விட்டம் கொண்ட ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் கொண்டு செல்லும் பகுதிகளில் பம்பிங் செய்ய வசதியாக மானூர், பனவடலிசத்திரம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் நீருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து பிற பகுதிகளுக்கு பகிர்மான குழாய்கள் மூலம் குடிநீர் சீராக பங்கீட்டு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதால், பயன்பெறும் 5 நகராட்சி மற்றும் டவுன் பஞ்சாயத்து பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 7 லட்சம் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : treatment plant ,Kondanagar , Partnership project, construction of treatment plant
× RELATED கமுதி அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு