திருவண்ணாமலை அருகே பரபரப்பு: ஏரி மண் அள்ளிய லாரியை தடுத்த பொதுமக்களுக்கு சரமாரி அடி, உதை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நடவடிக்கை கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து, கடந்த சில நாட்களாக லாரிகள் மூலம் மண் எடுக்கப்படுகிறது. அதையொட்டி, ஏரியில் 20 அடி ஆழத்துக்கும் மேலாக ஜேசிபி இயந்திரத்தில் பள்ளம் தோண்டியுள்ளனர்.

ஏரியில் இருந்து தொடர்ச்சியாக மண் எடுப்பதற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனாலும், மண் எடுப்பதை தடுத்து நிறுத்தவில்லை. மேலும், மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் நேற்று ஏரியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, லாரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கு மண் எடுத்தவர்கள் திடீரென பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில், மண் எடுப்பதை தட்டிக்கேட்ட கமல், பாலாஜி, வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேர் காயம் அடைந்தனர்.

எனவே, கிராம மக்கள் அனைவரும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் மண் எடுப்பவர்கள் மீதும், பொதுமக்களை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி, தச்சம்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதில், பொதுமக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: