×

ஆக்கிரமிப்புகளால் நிரம்பாத ஏரிகள்: அடிப்படை வசதிக்கு ஏங்கும் பொன்னை மக்கள்

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்குள்ள நீவா நதி ஆற்றில் ஒரு பொன்னியம்மன் சிலை வந்ததாகவும் இதனால் இந்த ஊரை பொன்னியம்மன் ஊர் என்று அழைத்ததாகவும் இது நாளடைவில் பொன்னையாக மாறியதாகவும் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சியாக பொன்னை ஊராட்சி உள்ளது. இக்கிராமம் 3 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 7 வார்டுகள் கொண்ட ஊரின் மக்கள் தொகை 11 ஆயிரத்தை கடந்துள்ளது.மாநிலத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பொன்னை ஊராட்சி இன்னும் முழுமையான வளர்ச்சி பெறவில்லை என்பதே இங்குள்ள மக்களின் ஆதங்கமாக உள்ளது. சாலைகளில் எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்களாக காட்சியளிக்கிறது. சிதிலமடைந்த சாலைகளே, பொன்னையின் பெரிய பிரச்னையாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்களும் நடைபெறாததால் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இல்லைஇதனால், பொன்னை ஊராட்சியில் பெரும்பாலான அரசு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைத்த சாலைகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. மேலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமான மழை பெய்தும் பொன்னை சுற்றியுள்ள பெரிய ஏரி, சின்ன ஏரி நிரம்பாமல் உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். அதேபோல பொன்னை பகுதியில் 24 மணி நேர அரசு மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் 24 மணி நேரமும் மருத்துவ சேவை அளிப்பதில்லை என்று நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் விபத்து உயிர்காக்கும் சிகிச்சைகளுக்கு வேலூர் வாலாஜா மற்றும் சோளிங்கர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனைத் தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவ உபகரணங்கள் உட்கட்டமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனைஅமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பொன்னை பகுதிக்கு பள்ளி படிப்பிற்காக வரும் மாணவர்களின் வசதிக்காக கிராமப்புறங்களில் இருந்து அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் இப்பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கும் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதேபோல் பொன்னையைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்வதற்காக வேலூர், ஆற்காடு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் இப்பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதேபோல் பொன்னை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. எனவே பொன்னை பஞ்சாயத்து மக்களின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் செவிசாய்த்து பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றினால் பொன்னை ஊராட்சி வளர்ச்சி அடையும். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பொன்னை ஊராட்சியில் 24 மணி நேர மருத்துவ வசதி, மருத்துவர்கள் பற்றாக்குறை, ஏரி ஆக்கிரமிப்புகள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

* அரிஞ்சய சோழன் பள்ளிப்படை அல்லது அவனீச்வரம் கோயில் என்பது அரிஞ்சய சோழனின் பள்ளிப்படையாகும். இதை கட்டியவர் ராஜ, ராஜ சோழன். வேலூர் மாவட்டம்  மேல்பாடி என்ற ஊரில் பொன்னை ஆற்றங்கரையில் கட்டப்பட்ட கற்றளியாகும்.

* இக்கோயிலில் தன் கண்ணை இறைவனுக்கு காணிக்கையாக கொடுக்கும் கண்ணப்பரை தடுக்கும் சிவன், பிச்சாடனார் போன்ற சிற்பங்கள் உள்ளன.

* மேல்பாடி அருகே உள்ள நீவா ஆற்றங்கரையில் நடந்த போரில் ராஜராஜ சோழனின் பாட்டனார் அரிஞ்சய சோழர் உயிர் துறந்தார். அந்த இடத்துக்கு அருகில் முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது.

* வள்ளிமலையில் முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்துவிட்டதால், முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.

* வள்ளிமலையில் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன.

* யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.

* வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும்போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

Tags : lakes , Lakes, infrastructure, Ponnai, people
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!