×

தரையிலும், கடலிலும் செல்லும் அதிநவீன ரோந்து கப்பல் கோடியக்கரை வந்தது

வேதாரண்யம்: தரையிலும், கடலிலும் செல்லும் அதிநவீன ரோந்து கப்பல் நேற்று கோடியக்கரை வந்தது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் தரையிலும், கடலிலும் செல்லும் ரோவர்கிராப்ட் என்று அழைக்கப்படும் அதிநவீன ரோந்து கப்பல் நேற்று காலை வந்துள்ளது. இந்த கப்பல் புதிய கலங்கரை விளக்கம் கடற்கரை பகுதியில் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. பாக்ஜலசந்தி கடற் பகுதியில் இந்த கப்பல் ஆழ்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

இலங்கை பகுதியில் இருந்து கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காகவும், தமிழகத்தில் இருந்து போதை பொருள் போன்ற கடத்தல் பொருள்கள் செல்வதை தடுப்பதற்காகவும், தீவிரவாதிகள் மூலம் பொருட்கள் கடத்தி செல்லாமல் இருப்பதற்காகவும் இந்த கப்பல் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 30 நாட்களுக்கு ஒரு முறை இந்த கப்பல் கோடியக்கரை கடற்பகுதிக்கு வருகிறது.

கோடியக்கரை விமானப்படை முகாமில் தங்கி உள்ள வீரர்களையும், அவர்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த கப்பலில் ஏற்றுவதற்கும், இதுவரை அந்த கப்பலில் பணிபுரிந்த வீரர்கள் தங்கள் உடமைகளுடன் விமான படை முகாமிற்கு வருவதாகவும் தெரிகிறது. இந்த ரோந்து கப்பலை ஏராளமானவர்கள் பார்த்து செல்கிறனர். பாக்ஜலசந்தியில் பாதுகாப்புக்காக கப்பல் பணியில் ஈடுபட்டாலும் கஞ்சா, தங்கம் கடத்தல் போன்ற பணிகளும், ஆளில்லாத படகுகள் வந்து ஒதுங்குவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என பொதுமக்கள் குற்றச்சாட்டுடன் தெரிவித்தனர்.

Tags : land ,sea ,Kodiakkara , Vedaranyam, a sophisticated patrol vessel
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துக்கான...