×

ஐ.நா. பொதுச்சபையில் அமெரிக்கா-சீனா பகீரங்க மோதல் : மீண்டும் ஒரு பனிப்போர் வெடிக்கக் கூடாது என்று உலக நாடுகள் அச்சம்!!

நியூயார்க்:  மாறிவரும் சர்வதேச அரசியல் சூழலில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவும் சீனாவும் பகிரங்கமாக மோதிக்கொள்ள புதிய பனிப்போர் வெடிக்குமோ? என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. 75 கால ஐ.நா வரலாற்றில் முதல் முறையாக இணைய வழியே நடைபெற்ற பொதுச்சபை கூட்டத்தில் அமெரிக்காவும் சீனாவும் பகிரங்கமாக மோதிக்கொண்டனர். இன்று உலகையே முடக்கிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை பொறுப்பாளியாக்கவேண்டுமென்று அமெரிக்கா குற்றம் சாட்டியது. தொடர்ந்து கொரோனா பரவலின் தொடக்கத்தில் உள்நாட்டில் போக்குவரத்தை முடக்கிய சீனா, சர்வதேச விமானங்களை அனுமதித்து வைரஸ் பரவலுக்கு வழிவகுத்து விட்டது என்பது அமெரிக்காவின் புகாராகும்.

பின்னர், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன அதிபர் ஜின்பிங் உரை அமைந்திருந்தது. அதாவது ஐ.நா வரை டிரம்ப் தமது அரசியல் வைரஸை பரப்புவதாக சாடிய அவர், கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படுவதாக விளக்கமளித்தார். மேலும், உலக நடப்புகளில் ஒரு நாடு ஆதிக்கம் செலுத்துவதையும், பிற நாடுகளை கட்டுப்படுத்துவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அமெரிக்காவை ஜின்பிங் மறைமுகமாக சாடினார். இந்நிலையில் அமெரிக்கா-சீனா இடையிலான வார்த்தைப் போர் புதிய பனிப்போருக்கு வழிவகுத்து விடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

இதனை தமது உரையில் வெளிப்படுத்திய ஐ.நா பொதுச்செயலாளர் ஆண்டனியோ புதிய பனிப்போர் உருவாகுவதை தவிர்த்து அனைவரும் ஒன்றுபட்டு கொரோனாவை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். அண்மை காலமாக வர்த்தகம், தொழிற்நுட்பம், தைவான், ஹாங்காங், ஜின்ஜியாங் போன்ற பிரச்சனைகளில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அதன் நீட்சியாக சர்வதேச அரசியல் அரங்கில் அமெரிக்காவுக்கு எதிரான வலுவான போட்டியாளராக சீனா உருவெடுத்திருப்பதை ஐ.நா பொதுச்சபை கூட்டம் உறுதிப்படுத்தி இருப்பதாகவே சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Tags : China ,US ,UN ,world ,nations ,General Assembly ,Cold War , UN General Assembly, America, China, Conflict, World Nations, Fear
× RELATED காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி...