×

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெளுத்து வாங்கிய சாம்சன், ஸ்மித், ஆர்ச்சர்: ராஜஸ்தான் ராயல்ஸ் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஷார்ஜா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 16 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார், ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 6 ரன் மட்டுமே எடுத்து தீபக் சாஹர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் இணைந்தார். வேகப் பந்துவீச்சாளர்களை சற்று எச்சரிக்கையுடன் அணுகிய இவர்கள் இருவரும், சென்னை அணியின் சுழற்பந்துவீச்சை சிக்சர்களாகப் பறக்கவிட்டு சிதறடித்தனர்.

குறிப்பாக சாம்சனின் ஆட்டத்தில் அனல் பறந்தது. சாவ்லா வீசிய 8வது ஓவரின் முதல் 2 பந்துகளையும் இமாலய சிக்சராகத் தூக்கிய சாம்சன், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்து தனது அரை சதத்தை நிறைவு செய்தார் (19 பந்து, 1 பவுண்டரி, 6 சிக்சர்). ஸ்மித் - சாம்சன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 56 பந்தில் 121 ரன் சேர்த்து மிரட்டியது. சாம்சன் 74 ரன் (32 பந்து, 1 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசி என்ஜிடி வேகத்தில் சாஹர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மில்லர் ரன் ஏதும் எடுக்காமல் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாக, சிஎஸ்கே வீரர்கள் உற்சாகமடைந்தனர். 35 பந்தில் அரை சதம் அடித்த ஸ்மித், எதிர் முனையில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் அதிரடியை தொடர முடியாமல் தடுமாறினார்.

உத்தப்பா 5 ரன் எடுத்து சாவ்லா சுழலில் டு பிளெஸ்ஸி வசம் பிடிபட்டார். திவாதியா 10 ரன், பராக் 6 ரன், ஸ்மித் 69 ரன் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து சாம் கரன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கடைசி ஓவரில் ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை (2 நோ பால், பிரீ ஹிட்ஸ்) பறக்கவிட ராயல்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 216 ரன் குவித்து அசத்தியது. டாம் கரன் 10 ரன், ஆர்ச்சர் 27 ரன்னுடன் (8 பந்து, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 217 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே வெற்றிக்காக போராடியது. அற்புதமாக ஆடிய டுபிளெஸ்ஸி 72 ரன் (37 பந்து) விளாசினார்.

வாட்சன் 33, ஜாதவ் 22, முரளி விஜய் 21 ரன் எடுத்தனர். ஆனாலும் கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியை காட்டத் தவறியதால் சிஎஸ்கே அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. மிகவும் நம்பிய கேப்டன் தோனி 13 பந்தில் 10 ரன் எடுத்திருந்த நிலையில் கடைசி 3 பந்தில் ஹாட்ரிக் சிக்சர் பறக்கவிட்டு ஆறுதல் தந்தார். சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. தோனி 29 ரன் (17 பந்து), ஜடேஜா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய திவாதியா 3 விக்கெட் கைப்பற்றினார்.



Tags : Samson ,Smith ,whitewash ,Archer ,Chennai Super Kings ,Rajasthan Royals , Samson, Smith, Archer beat Chennai Super Kings: Rajasthan Royals win by 16 runs
× RELATED கேப்டன் சஞ்சு சாம்சன் 82* ரன் விளாசல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி