×

8 எம்பிக்களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெறும்வரை நாடாளுமன்ற புறக்கணிப்பு போராட்டம்: எதிர்க்கட்சிகள் அதிரடி அறிவிப்பு; இரு அவைகளிலும் வெளிநடப்பு

புதுடெல்லி: மாநிலங்களவையில் 8 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்ப பெறும் வரை, நாடாளுமன்றத்தின் எஞ்சிய கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அதிரடியாக அறிவித்துள்ளன. மேலும், இரு அவைகளிலும் இருந்தும் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் மக்களவையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மாநிலங்களவையில்கடந்த ஞாயிறன்று 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. துணை தலைவர் ஹரிவன்ஸ், குரல் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், எம்பி.க்கள் ‘டிவிஷன்’ முறையில் நேரடியாக வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். மையப்பகுதியை முற்றுகையிட்ட எம்பி.க்களை அவை பாதுகாவலர்கள் வெளியேற்றினார்கள்.

நேற்று முன்தினம் அவை நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக 8 எம்பி.க்களை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று முன்தினம் அவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை மாநிலங்களவை கூடியது. பூஜ்ய நேரத்துக்கு பின்னர் பேசிய எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், 8 எம்பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கீழே தனியார் கொள்முதல் செய்ய முடியாது என்ற மற்றொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எதிர்கட்சிகள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கும் என்றார். அப்போது பேசிய அவை தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்கட்சிகள் தங்கள் புறக்கணிக்கும் முடிவு மற்றும் அவை விவாதத்தில் பங்கேற்பது குறித்து மீ்ண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும்” என்றார். தொடர்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி கூறுகையில், “ எம்பிக்களை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் அரசு நரகம் போன்று செயல்படவில்லை. அவர்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தால் அரசு அதனை கவனத்தில் கொள்ளும்” என்றார்.
 
அவை தலைவர் கூறியதை ஏற்க மறுத்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகள் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. அதன் பின்னர் தேசிய காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் அவையை புறக்கணித்து வெளியேறின. இதேபோல், 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்று மக்களவையையும் புறக்கணித்தனர். மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்கட்சிகளும் அவையை புறக்கணிக்கிறோம்,” என்றார். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகள் மக்களவையை புறக்கணித்தன. ஆனால், எத்தனை நாட்களுக்கு இந்த புறக்கணிப்பு தொடரும் என எந்த உறுப்பினரும் குறிப்பிடப்படவில்லை.

* சோனியா, ராகுல் நாடு திரும்பினர்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி அமெரிக்கா சென்றார். அவருடைய மகனும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுலும் சென்றார். இதனால், இந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று இருவரும் டெல்லி திரும்பினர். இந்த நாடாளுமன்ற தொடரை இன்றுடன் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதால், கடைசி நாளான இன்று அவர்கள் அவைக்கு வருவார்கள் என தெரிகிறது.

* போராட்டத்தை கைவிட்ட எம்பிக்கள்
மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்கள் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையின் கீழ் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை வரை போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, தங்கள் போராட்டத்தை 8 எம்பி.க்களும் கைவிட்டனர். காங்கிரஸ் எம்பி நசீர் ஹூசைன் கூறுகையில், “அனைத்து எதிர்கட்சி உறுப்பினர்களும் அவை நடவடிக்கையில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளனர். எதிர்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கையில் பங்கேற்காத போது போராட்டத்தில் ஈடுபடுவதில் அர்த்தம் இல்லை,” என்றார்.

* கூட்டத் தொடர் இன்று முடிவு?
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 14ம் தேதி தொடங்கியது. மேலும், வார விடுமுறையின்றி வருகிற 1ம் தேதி வரை தொடரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதில், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட்டன. இருப்பினும், அதையும் மீறி மக்களவை எம்பி.க்கள்  17 பேரும், மாநிலங்களவையை சேர்ந்த 8 எம்பி.க்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரகலாத் படேல் ஆகியோரும் தொற்றால் பாதித்தனர். இதனால், உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி, கூட்டத் தொடரை இன்றுடன் முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இரு அவைகளும் இன்று மாலை வெளியிடும் என்று தெரிகிறது.

* எம்பிக்களை கண்டித்து ஹரிவன்ஸ் உண்ணாவிரதம்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று காலை அங்கே சென்ற மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் சிங், அவர்களுக்கு டீ கொடுப்பதற்கு முன் வந்தார். ஆனால், எம்பிக்கள் அவர் வழங்கிய டீ யை ஏற்க முன்வரவில்லை. துணை தலைவர் ஹரிவன்ஸ் தேநீர் வழங்க முயற்சித்தது பாராட்டுக்குரியது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் அவை தலைவர் வெங்கைய்ய நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை எழுதிதியுள்ளார்.

அதில், “ ஜனநாயகம் என்ற பெயரில் உறுப்பினர்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்டது எனது மனதையும், இதயத்தையும் வலிக்க செய்தது. இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. எதிர்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கையை கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதத்தை தொடங்குகிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். இவருக்கு போட்டியாக, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்களுக்கு ஆதரவாக ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

Tags : MPs ,boycott protest ,Parliamentary ,Opposition , Parliamentary boycott protest until 8 MPs' suspension order withdrawn: Opposition declares action; Outreach in both of them
× RELATED எம்.பி.க்களின் எண்ணிக்கை பலம்...