×

நைட் ரைடர்சுடன் இன்று பலப்பரீட்சை மும்பை இந்தியன்சுக்கு நெருக்கடி

அபுதாபி: தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் மண்ணைக் கவ்விய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று கொல்கத்தா நைட் ரைடர்சின் சவாலை சந்திக்கிறது. முதல் போட்டியில் டி காக் (33 ரன்), சவுரவ் திவாரி (42 ரன்) தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறியதால், மும்பை அணியால் சிஎஸ்கேவுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. சென்னை தொடக்க வீரர்கள் முரளி விஜய், ஷேன் வாட்சனை விரைவில் வெளியேற்றினாலும், டு பிளெஸ்ஸி - ராயுடு ஜோடியை பிரிக்க முடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இருவரும் அரை சதம் அடித்ததுடன் 3வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்தது நடப்பு சாம்பியனை சரணடைய வைத்துவிட்டது. இந்த நிலையில், தனது 2வது போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும் மும்பை அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேப்டன் ரோகித், பாண்டியா பிரதர்ஸ், போலார்டு ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதே சமயம், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி தனது முதல் போட்டியில் உற்சாகமாக களமிறங்குகிறது.

கார்த்திக், மார்கன், சுனில் நரைன், ரஸ்ஸல், கில் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவது மும்பை பவுலர்களுக்கு இமாலய சவாலாகவே இருக்கும். பெர்குசன் அல்லது பேட்டின்சனுடன் சித்தேஷ், ராணா என வேகக் கூட்டணி அமையலாம். குல்தீப் யாதவ் - சுனில் நரைன் சுழலை தாக்குப்பிடிப்பதும் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சிரமமே. கொல்கத்தாவுடன் இதுவரையிலான மோதல்களில் மும்பை அணியே அதிக ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும், இன்றைய போட்டி நிச்சயம் அத்தனை எளிதாக இருக்காது.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷெர்பேன் ரூதர்போர்டு, சூரியகுமார் யாதவ், அன்மோல்பிரீத் சிங், கிறிஸ் லின், சவுரவ் திவாரி, தவால் குல்கர்னி, ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் மெக்லநாகன், ராகுல் சாஹர், டிரென்ட் போல்ட், மோசின் கான், பிரின்ஸ் பல்வந்த்ராய் சிங், திக்விஜய் தேஷ்முக், ஹர்திக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், கைரன் பொலார்டு, குருணல் பாண்டியா, அனுகுல் ராய், நாதன் கோல்டர் நைல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ஆதித்ய தாரே (விக்கெட் கீப்பர்). விலகல்: லசித் மலிங்கா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஷிவம் மாவி, சந்தீப் வாரியர், குல்தீப் யாதவ், இயான் மார்கன், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், நிகில் நாயக், எம்.சித்தார்த், ஆந்த்ரே ரஸ்ஸல், லோக்கி பெர்குசன், பிரசித் கிரிஷ்ணா, ஷுப்மான் கில், நிதிஷ் ராணா, சித்தேஷ் லாட், கம்லேஷ் நாகர்கோட்டி, ரிங்க்கு சிங், வருண் சக்ரவர்த்தி, அலி கான், டாம் பான்டன், கிறிஸ் கிரீன், ராகுல் திரிபாதி.

* நேருக்கு நேர்...
ஐபிஎல் தொடரின் 5வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளதில் மும்பை 19 போட்டிகளிலும், கொல்கத்தா 6 போட்டிகளிலும் வென்றுள்ளன. பெரும்பாலும் அதாவது 24 ஆட்டங்களும் லீக் சுற்றுகளாக இருந்தன. இந்த 2 அணிகளும் 2017ல் மட்டுமே கூடுதலாக 2வது எலிமினேட்டர் சுற்றில் மோதின. அதிலும் மும்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் தொடர்களில் இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா வெற்றி பெற்றுள்ளது.

Tags : Crisis ,Mumbai Indians ,Knight Riders , Crisis for Mumbai Indians in today's multi-match series with Knight Riders
× RELATED ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் போக்குவரத்து நெருக்கடி