×

30 ஆயிரம் ரத்த மாதிரிகள் மூலம்தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை அறிய நோய் எதிர்ப்பு சக்தி மூலம் ஆய்வு: மாத இறுதியில் துவங்க திட்டம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை நோய் எதிர்ப்பு சக்தி மூலம் கண்டறிய 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாதம் இறுதியில் ஆய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. குறிப்பாக ஊரங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு தினசரி கொரோனா பாதிப்பு இந்திய அளவில் 98 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் கடந்த மாதம் கொரோனா சமூக பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் பொதுமக்களிடம் ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது.

பொதுமக்களின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் அளவை கொண்டு கொரோனா சமூகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை அறியும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த ஆய்வில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12 ஆயிரத்து 405 மாதிரிகளை சோதனை செய்ததில் 2673 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. இது 21.5 சதவீதம் ஆகும். இந்நிலையில் தேசிய அளவில் 2வது ஆய்வை ஐசிஎம்ஆர் 20ம் தேதி நடத்தி முடித்தது. இந்நிலையில் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வை ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது : தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை தொடர்பாக மாநில அளவில் ஆய்வு நடத்த உள்ளோம். இதன்படி 30 ஆயிரம் மாதிரிகளை சேரித்து ஆன்டிபாடி முறையில் சோதனை செய்யப்படும். இந்த ஆன்டிபாடி சோதனை முடிவில் ஒருவரின் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்படும். இந்த அளவை கொண்டு கொரோனா பாதிப்பின் நிலைமை கண்டறியப்படும். இந்த மாத இறுதியில் இந்த ஆய்வு தொடங்கப்படும். அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடையும்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Tamil Nadu , Immunoassay to determine the level of corona spread in Tamil Nadu through 30 thousand blood samples: plan to start at the end of the month
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...