வேளாண் கொள்முதல் விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: வேளாண் விளைப்பொருட்கள் கொள்முதல், லாபத்துடன் கூடிய விலையை அரசு சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள இரு சட்டங்களாலும், மாநிலங்களவையில் இனி நிறைவேற்றப்படவுள்ள அத்தியாவசியப் பொருட்கள் மசோதாவாலும் வேளாண் விளைபொருட்களை அரசுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்வது காலப்போக்கில் நிறுத்தப்பட்டு விடும். அதனால் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கும் வழக்கமும் இல்லாமல் போய்விடும் என்பதுதான் உழவர்களின் அச்சமாகும்.

இது குறித்த உத்தரவாதம் சட்ட மசோதாக்களில் இல்லாத சூழலில் உழவர்களின் இந்த அச்சம் நியாயமானதுதான். உழவர்களின் இந்த அச்சத்தைப்போக்கி, பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசுகளின் கடமையாகும். உழவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், நேரடி கொள்முதல் முறையும், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யும் முறையும் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான். பிரதமரின் இந்த அறிவிப்பை சட்டமாக்கி விட்டால், நாடு முழுவதுமுள்ள உழவர்களின் அச்சத்தை முழுமையாக நீக்கிவிட முடியும்.

உழவர்கள் அரும்பாடுபட்டு விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை என்றைக்கு கிடைக்கிறதோ, அன்றைக்கு தான் விவசாயம் லாபம் நிறைந்த தொழிலாக மாறும்; உழவர்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். எனவே, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய பரிந்துரைகளின்படி உழவர்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவை உழவர்கள் விரும்பும் வரை நீடிப்பதற்கு ஏற்ற வகையில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: