பதவி நீக்கம் செய்யப்பட்ட களப்பணியாளர்களை பணி அமர்த்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப் பணியாளர்களாக போற்றப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்காமல் தமிழக அரசு புறக்கணிப்பதை கண்டித்தும், ஊதியத்தை உயர்த்தி வழங்கிட கோரியும் கடந்த 7ம் தேதி ரிப்பன் மாளிகை முன் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு சொற்ப அளவில் (ரூ.12) மட்டும் ஊதியம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக பணியாளர்கள் சுமார் 291 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, 714 தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு கேட்ட காரணத்திற்காக தொழிலாளர்களின் குரல்வளையை நெரிக்கின்ற வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டதையும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ததையும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் அணி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும், தொழிலாளர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசையும், சென்னை மாநகராட்சியையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: