×

மேகதாது அணை அமைக்கும் கர்நாடகாவின் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்க கூடாது: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக, மேகதாது அணை அமைப்பது தொடர்பாக  கர்நாடக அரசு அளித்துள்ள  திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது மற்றும் அணைகட்ட அனுமதிக்கக்  கூடாது என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில முதல்வர் தங்களைச் சந்தித்த போது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

மேகதாது அணைத் திட்டம், 5.2.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். மேலும், இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், மேகதாது அணைத் திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தற்போது இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம் காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு  குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

மிக முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாகப் பாதிக்கும். எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதல்வர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு, திமுக சார்பாக தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
ஜெயங்கொண்டத்தில் வாழும் ஓய்வு பெற்ற மருத்துவர் பாலசுப்பிரமணியன் உரிய ஆவணங்களுடன் கடன் கேட்டுச் சென்ற போது, ‘இந்தி தெரியாத உங்களுக்குக் கடன் தரமுடியாது’ என்று ஆணவத்துடன் கூறியிருக்கிறார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றும் வட இந்திய அதிகாரி. இந்தி மொழி வெறி எண்ணெய் ஊற்றி வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு வேலை பார்க்க வந்த ஒருவருக்கு இவ்வளவு ஆணவமா. பாஜ அரசின் பின்புலம் இதற்குக் காரணமா. எதுவாக இருந்தாலும் தமிழர் உணர்வுடன் விளையாடாதீர்கள். சிறு பொறிகள் தீப்பிழம்பாக மாறிவிடும் பேரபாயம் உண்டு; எச்சரிக்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுக எம்பிக்களிடம் மோடி உறுதி
நாடாளுமன்ற திமுக குழு தலைவரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பி.க்கள் தயாநிதி மாறன், திருச்சி சிவா, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று காலை  சந்தித்தனர். பின்னர், டி.ஆர்.பாலு அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அதை பிரதமரிடம் வழங்கினோம். மேலும், சட்டத்தை மீறி கர்நாடகா தொடர்ந்து செயல்படுவது குறித்தும் பிரதமரிடம் விளக்கமாக எடுத்து கூறினோம்.

மேகதாதுவில் புதிய அணை கட்டினால், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும், இது குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனை கர்நாடக கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. முன்னதாக உங்களிடம் கர்நடகா முதல்வர் எடியூரப்பா வைத்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் 2007ம் ஆண்டு நடுவர் மன்றமும், 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் சரியான உத்தரவையே பிறப்பித்துள்ளன. ஆனால், கர்நாடகா அவற்றை மீறி செயல்பட்டு வருகின்றன என்றும், மேகதாதுவில் அணை கட்டினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பிரதமரிடம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.

 தமிழகத்தில் நீர்நிலை மேம்பாடு, வேளாண் விரிவாக்கம், புதிய அணைகள் கட்டுவது என பல்வேறு திட்டங்களை அதிமுக ஆட்சி கிடப்பில் போட்டுள்ளது. மேலும், மேகதாது அணை உட்பட அனைத்து பிரச்னைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசும் கண்டு கொள்ளவில்லை. இது குறித்து பிரதமருக்கும் அழுத்தம் தரவில்லை. அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பார். அப்போது, தமிழக விவசாயிகளின் அனைத்து பிரச்னைகளும் கண்டிப்பாக தீர்த்து வைக்கப்படும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை படித்த பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் மேகதாது அணை விவகாரத்தில் எந்தவொரு செயல்பாடுகளும் இருக்காது. இது பற்றி உங்கள் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உறுதியாக தெரிவித்து விடுங்கள். அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் கூறுங்கள் என எங்களிடம் தெரிவித்தார்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Karnataka ,Megha Dadu Dam ,MK Stalin , Karnataka's project report on construction of Megha Dadu Dam should not be approved: MK Stalin's letter to the Prime Minister
× RELATED கர்நாடகா கோயிலில் தீப்பந்தங்களை வீசி நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்