தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வு தீ நாடு முழுவதும் பரவி நன்மை தராத சட்டங்களை பொசுக்கும்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து அவர்களை அடிமைப்படுத்தும் மத்திய பாஜ அரசின் வேளாண் மசோதாக்கள், சட்டமாவதையும் நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளிலும் கடுமையாக எதிர்த்தது திமுக. தோழமைக் கட்சியின் உறுப்பினர்களும் உறுதியுடன் எதிர்த்தனர். விவசாயிகளை பாதுகாத்திட ஆக்கபூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ளவும், ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும், கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நேற்று முன்தினம் (21ம் தேதி) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

திமுக தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தும் உங்களில் ஒருவனான நான் தலைமையேற்க தோழமைக் கட்சித் தலைவர்களும் பங்கேற்று விவசாயிகள் நலன் காக்க ஆலோசனை நடத்தப்பட்டது. வேளாண்மை சம்பந்தப்பட்ட மூன்று மசோதாக்களை, கொரோனா பேரிடர் காலத்திலும் அதைப் பற்றிச் சிறிதும் கவலை கொள்ளாமல், அவசர அவசரமாக நிறைவேற்றிச் சட்டமாக்கியுள்ள மத்திய பாஜக அரசும், அதன் பிரதமர் நரேந்திர மோடியும், இந்தச் சட்டங்களால் விவசாயப் பெருமக்களுக்கு நன்மை விளையும் என்றும், அவர்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்கப்பட்டுப் பன்மடங்கு உயரும் என்றும் விளக்கம் அளிக்கிறார்கள்.

மத்திய பாஜக அரசின் எந்த ஒரு சட்டமும் மாநில உரிமைகளைப் பறிப்பது போல வேளாண்மைச் சட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன. அதனால், எதிர்க்கட்சியான திமுக இதனை முழுமையாக எதிர்க்கிறது. ஆளுங்கட்சியான அதிமுக தன்னுடைய பதவியைக் காப்பாற்றிக் கொண்டு மிச்சக்காலத்தை ஓட்டுவதற்காக விவசாயிகளுக்குத் துரோகம் செய்து, மசோதாக்களை ஆதரித்து வாக்களித்து அவை சட்டமாகத் துணை நின்றுள்ளது. வேளாண் மசோதாக்களால் ஆபத்து என்பதை அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனே தன் உணர்வை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தியிருப்பதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும்.

தற்சார்புக் கொள்கை என்று வானவில் போல வண்ண வண்ணமாக வார்த்தைஜாலம் காட்டிக்கொண்டு, தன்மானத்துடன் வாழும் இந்திய விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றியிருக்கும் பா.ஜ.க. அரசையும் அதற்குத் துணை போன- ‘விவசாயி வேடம்’போடும் அடிமை அ.தி.மு.க. அரசையும் கண்டித்து, திமுகவும் தோழமைக் கட்சியினரும் விவசாய அமைப்பினருடன் இணைந்து நின்று, செப்டம்பர் 28ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் தழுவிய அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்கள், நகராட்சி மற்றும் ஒன்றியங்களில் கொரோனா கால விதிமுறைகளையும் - பாதுகாப்பு நெறிமுறைகளையும் கடைப்பிடித்து நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். செப்டம்பர் 28 நடைபெறுகிற ஆர்ப்பாட்டம், விவசாயிகளின் பங்கேற்புடன்- பொதுமக்களின் ஆதரவுடன் மத்திய - மாநில அரசுகளின் வஞ்சகத்தை அம்பலப்படுத்தட்டும்! இந்தியாவின் தென்முனையில் கிளம்பும் அறவழிப் போராட்ட உணர்வுத் தீ, நாடு முழுவதும் பரவட்டும்! நன்மை தராத சட்டங்களைப் பொசுக்கட்டும்! உலகத்தார்க்கு ஆணியாம் உழவர்களைப் போற்றட்டும்! விவசாயிகளின் வாழ்வு மலர்ந்து மணம் பெறட்டும். மத்திய பாஜக அரசின் வேளாண்மைச் சட்டம் உட்பட எந்த ஒரு சட்டமும் மாநில உரிமைகளைப் பறிக்கிறது.

Related Stories: