×

திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிப்பு ஆக்சிஜன் கிடைக்காமல் இருவர் பரிதாப பலி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு, திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு முருகானந்தபுரத்தை சேர்ந்த யசோதா (67), வெங்கடேஸ்புரத்தை சேர்ந்த கவுரவன் (59) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு மூச்சு திணறல் காரணமாக கடந்த 3 நாட்களாக வெண்டிலெட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது, மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ேநற்று காலை 10.30 மணியளவில் கட்டிட பணியின்போது கொரோனா வார்டுக்கு செல்லும் மின்ஒயர் துண்டானது. இதனால், கொரோனா வார்டில் 4 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. இந்நேரத்தில், கவுரவனுக்கும், யசோதாவுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடீரென ஆக்‌சிஜன் பற்றாக்குறையால் இருவரும் இறந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததற்கு மருத்துவ நிர்வாகமே காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன், மருத்துவமனையை ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறுகையில், `மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. நேற்று காலை கட்டுமான பணிகள் வழக்கம்போல் நடந்தன. அப்போது கொரோனா வார்டுக்கு செல்லும் மின் ஒயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டது. மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதால் ஆக்சிஜன் தடைபடவில்லை. கட்டிட பணியின்போது மின்ஒயர் துண்டிக்கப்பட காரணமாக இருந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இறந்த கவுரவன் பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், செந்தில் என்ற மகனும் உள்ளனர். யசோதாவின் கணவர் பெயர் கோபால். கூலித்தொழிலாளி. இவர்களுக்கு, திலகவதி, கீதா, ராதா, கலாவதி என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.

இதனிடையே, அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

மருத்துவர்கள் யாரும் வரவில்லை
இறந்த யசோதாவின் மகள் கலாவதி கூறுகையில், `எனது தாய் யசோதாவை கடந்த 19ம் தேதி  திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி எடுத்தனர். அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறலால் வெண்டிலேட்டர் கருவி பொறுத்தப்பட்டிருந்தது. நேற்று காலை நலமாக தான் இருந்தார். ஆனால், திடீரென பவர் கட்டானதால் ஆக்சிஜன் தடைபட்டது. இதனால் எனது தாய் மூச்சுத்திணறி இறந்தார். அப்போதுகூட மருத்துவர்கள் யாரும் வரவில்லை. செவிலியர்கள் மட்டும் தான் இருந்தார்கள். இந்த மருத்துவமனையில் எந்த வசதிகளும் கிடையாது’ என்றார்.

மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
மூச்சுத்திணறலால் இறந்த கவுரவனின் மகன் செந்தில் கூறியதாவது: எனது தந்தைக்கு 21ம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். நேற்று காலை வரையில் நன்றாகதான் இருந்தார். ஆனால், மருத்துவமனையின் அலட்சியத்தால் எனது தந்தை பலியாகி விட்டார். இதற்கு காரணமான மருத்துவமனை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்கு காரணம் ஐசியூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது. உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் லட்சணம் இது. கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாகிவிட்டன. மக்களைக் காக்க வேண்டிய அரசு - கொல்லும் அரசாக மாறி விட்டது.Tags : Tirupur Government Hospital Corona , Tirupur Government Hospital Corona ward power outage kills two due to lack of oxygen
× RELATED பெரம்பலூரில் பரபரப்பு மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி