×

இந்தி தெரியாது என்பதால் மருத்துவருக்கு கடன் தர மறுப்பு: வங்கி மேலாளர் இடமாற்றம்

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் (65). அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் அருகே வணிக வளாகம் கட்ட முடிவு செய்தார். இதற்காக லோன் சம்பந்தமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். மேலாளராக பணியாற்றி வரும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஷால்பட்டேல் என்பவரை அணுகி, இடம் சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் வரவு செலவு கணக்குகள், வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை சமர்ப்பித்து கடனுதவி கேட்டு உள்ளார். அப்போது மேலாளர், ‘உங்களுக்கு இந்தி தெரியுமா’ என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார்.  

அதற்கு மருத்துவர் எனக்கு, ‘இந்தி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும்’ என ஆங்கிலத்தில் தெரிவித்தார். அதை கேட்ட மேலாளர் கடன் கொடுக்க இயலாது எனக்கூறி பாலசுப்பிரமணியனை திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலசுப்ரமணியன் கூறுகையில், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடந்த 15 வருடங்களாக வாடிக்கையாளராக உள்ளேன். வணிக வளாகம் கட்ட கடனுதவி கேட்டு செப்டம்பர் 2வது வாரம் வங்கி மேலாளரை நேரில் அணுகி என்னிடம் இருந்த ஆவணங்களை சமர்ப்பித்தேன். ஆனால் அவர் இந்தி தெரியுமா? என கேட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியும் என ஆங்கிலத்தில் தெரிவித்தேன்.

அதற்கு மேலாளர், இந்தி தெரிந்தால் மட்டுமே உங்களது ஆவணங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மொழி பிரச்னை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதால் மான நஷ்ட ஈடு கேட்டு கடந்த 12ம் தேதி வழக்கறிஞர் மூலமாக வங்கி மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்’ என்று தெரிவித்தார். புகாருக்குள்ளான விஷால் பட்டேலை திருச்சிக்கு இடமாற்றம் செய்து திருச்சி மண்டல முதன்மை மேலாளர் உத்தரவிட்டார்.


Tags : doctor ,Bank manager transfer , Denial of credit to doctor because he does not know Hindi: Bank manager transfer
× RELATED பூசணி விதையின் பயன்கள்!