இந்திய கலாச்சாரம் குறித்த ஆய்வு குழுவில் தமிழறிஞர்களை இடம்பெற செய்ய வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள குழுவில் தமிழறிஞர்கள், தென்னிந்தியர்கள், வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், மைனாரிட்டிகள், பட்டியலினத்தவர்கள்  இடம்பெற பிரதமர் மோடி வழிவகை செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.   இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அமைத்துள்ள 16 உறுப்பினர்கள் கொண்ட குழுவில், தமிழறிஞர்கள் - தென்னிந்தியர்கள் - வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மைனாரிட்டிகள்- பட்டியலினத்தவர்  இடம்பெற வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறிய ஆலோசனையைக் கேட்ட பிறகு, ‘திருச்சி சிவா நல்ல ஆலோசனை வழங்கியிருக்கிறார்; இதைக் குறித்துக் கொண்டு அந்த ஆலோசனையைப்  பரிசீலிக்க வேண்டும்’ என்று சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.  

தமிழர்களின் கலாச்சாரம் - ஏன், திராவிடர்களின் கலாச்சாரம், மிகத் தொன்மை வாய்ந்தது. இந்தியாவின் மிகவும் மூத்த மொழியாகத் தமிழ் செம்மொழி இருக்கிறது. ஆனால் 12 ஆயிரம் ஆண்டு இந்தியக் கலாச்சாரத்தை ஆய்வு செய்யப் போகிறோம் என்று ஒரு குழுவை அமைத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசு,  அதில் ஒரு தமிழறிஞரைக் கூட இடம்பெறச் செய்யவில்லை. நாட்டின் பன்முக அடையாளத்தையும் - பண்டையத் தமிழ் - திராவிட நாகரிகத்தையும் அவமதிக்கும் எண்ணத்துடன்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ள அந்தக் குழுவில் உள்ள 16 உறுப்பினர்களில், 6 பேர் சமஸ்கிருத மொழியில் புலமைத்துவம் பெற்றவர்கள் என்பது, ‘தமிழ்மொழி’ மீது மத்திய அரசுக்கு இருக்கும்  ஆழமான வெறுப்பைக் காட்டுகிறது.

இதுபோன்ற சூழலில், திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட்ட ஆலோசனையை, “நல்ல ஆலோசனை” என்று பாராட்டி அதை மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டியுள்ள மாநிலங்களவைத் தலைவரின் அறிவுரையை, அவரும் தென்னகத்தவர்தானே என அலட்சியப்படுத்தி விடாமல் பின்பற்றி, செயல்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தற்போது அமைக்கப்பட்டுள்ள கலாச்சார ஆய்வுக் குழுவை உடனடியாக மாற்றி அமைத்து  “தமிழ்நாடு, தென்னிந்தியா, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் பட்டியலின, சிறுபான்மை சமூகப்  பிரதிநிதிகள்” பங்கேற்கும் வகையில், புதிய குழுவினை நேர்மையான முறையில் நடுநிலையோடு , உடனடியாக நியமித்திட, மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: