×

வரும் 2050ல் 26.72 டிஎம்சியாக தேவை அதிகரிக்கும் என கணிப்பு: சென்னை குடிநீர் தேவைக்கு 4,500 கோடியில் திட்டம்

உலக வங்கி அதிகாரிகளுடன் இன்று அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: வரும் 2050ல் சென்னை மாநகரின் குடிநீர் தேவை 26 டிஎம்சியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்ப 4,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு தற்போது ஆண்டுக்கு 12 டிஎம்சி நீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது வரை ஆண்டுக்கு 11 டிஎம்சி நீர் கூட விநியோகிக்க முடியாத நிலைதான் உள்ளது. இந்த சூழலில் வரும் 2050ம் ஆண்டில் சென்ைன மாநகர மக்களின் குடிநீர் தேவை ஆண்டுக்கு 26.72 டிஎம்சியாக அதிகரிக்கும் என நீர்ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. எனவே, தற்போதே அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தான் பொதுப் பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரியம் இணைந்து இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்தது.

அதன்படி சென்னை அருகே உள்ள பாசனத்துக்கு பயன்படாத மற்றும் கழிவுநீர் கலந்த 60 ஏரிகளை புனரமைத்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்க தேர்வு செய்யப்பட்டது. அதேபோன்று கழுவேலி ஏரி நீர், வாயலூர் தடுப்பணை நீர் கொண்டு வந்தால் சென்னைக்கு ஆண்டுக்கு 6 டிஎம்சி கிடைக்கும். இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் 3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.  அதேபோன்று கழிவுநீர் கலந்த ஏரிகளை சுத்தம் செய்து, அந்த ஏரிகளை மறு புனரமைப்பு பணி மேற்கொள்ள 1,500 கோடி. 2050 ஆண்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மாநகரில் நெடுஞ்சாலைத்துறை, சென்னை மாநகராட்சி சார்பில் பாலங்கள், சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது.

 எனவே, இதற்காக தமிழக அரசு சார்பில் உலக வங்கியிடம் நிதி கேட்கப்படுகிறது.  இந்த நிலையில் இது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் தமிழக அதிகாரிகள் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன், நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, சென்னை குடிநீர் வாரிய இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Chennai , Demand is expected to increase to 26.72 TMC by 2050: Rs 4,500 crore project for Chennai drinking water demand
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...