×

அத்தியாவசிய பட்டியலில் இருந்து வெங்காயம், பருப்பு ,எண்ணெய் நீக்கம்: இஷ்டம் போல் இனி இருப்பு வைக்கலாம்

* மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்
* அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி, வெங்காயம், பருப்பு உள்ளிட்டவற்றை இருப்பு வைக்கக் கூடாது. 60 ஆண்டு கால இச்சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி: அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா, மாநிலங்களவையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நேற்று நிறைவேறியது. இதன் மூலம் வெங்காயம், உருளைக் கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய் ஆகியவை அத்தியாவசியப் பொருட்களில் இருந்து நீக்கப்படுகின்றன. இதன் மூலம், இப்பொருட்களை இனிமேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்து விற்கும் நிலை உருவாகி இருக்கிறது.நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா ஆகியவற்றுடன் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 15ம் தேதி நிறைவேற்றப்பட்டது. மற்ற இரு மசோதாக்கள் மாநிலங்களவையில் கடந்த 20ம் தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, 8 எம்பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்பி.க்களும் வெளிநடப்பு செய்து இருந்தனர். இதனால், அவையில் எதிர்க்கட்சி எம்பி.க்கள் யாரும் இல்லாத நிலையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, பாஜ மற்றும் அதன் ஆதரவு கட்சி எம்பி.க்களால் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து வந்த வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய் ஆகியவை, அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இப்பொருட்களை வியாபாரிகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் இனிமேல் இஷ்டம் போல் இருப்பு வைத்து விற்கும் நிலை உருவாகி இருக்கிறது.

முன்னதாக, இந்த மசோதா மீதான குறுகிய விவாதத்திற்கு பதிலளித்து மத்திய நுகர்வோர் விவகார, உணவு மற்றும் பொது விநியோக துணை இணை அமைச்சர் தன்வே ராவ்சாஹிப் தாதாராவ் பேசுகையில், ‘‘உணவு தானிய உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறாத போது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. எனவே, இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். இந்த திருத்தத்தின் மூலம் தேசிய பேரிடர்கள், விலைவாசி உயர்வுடன் கூடிய பஞ்சம் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்க வரம்பு விதிக்கப்படும்,’’ என்றார்.

அவர் மேலும் பேசுகையில், ‘‘இதுவரை இருப்பு வைக்க தடை இருந்ததால், அவை விவசாய உள்கட்டமைப்பில் முதலீடுகளை தடுத்தன. இந்த தடை நீக்கப்படுவதன் மூலம், விவசாய துறையில் தனியார் துறைகள், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கு வழிவகுக்கும். பயிர் அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க, அதிக சேமிப்பு திறனை உருவாக்க உதவும். மேலும், இந்த திருத்தம் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருக்குமே சாதகமானது,’’ என்றார். இனி, இந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். அவர் கையெழுத்திட்டதும் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும்.

விலை உயரும் அபாயம்
இந்தியாவில் வெங்காயம், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், உருளைக்கிழங்கு , தானியங்கள் போன்றவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், இவற்றை அதிகளவில் பதுக்கி, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, கொள்ளை லாபத்தில் விற்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் மூலம் இதற்கு கடிவாளம் போடப்பட்டு வந்தது. இப்போது, அந்த கட்டுப்பாட்டில் இருந்து இப்பொருட்கள் நீக்கப்படுவதால், செயற்கை தட்டுப்பாட்டின் மூலம் இவற்றின் விலையை தாறுமாறாக உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பொருட்களுக்கு இனிமேல் வியாபாரிகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் நிர்ணயிப்பதே விலையாக இருக்கும்.

Tags : Removal , Removal of onion and lentil oil from the list of essentials: You can keep as much stock as you like
× RELATED போதிய அளவில் வெங்காயம் இருப்பு...