×

விவசாய மசோதாவில் உள்ள குறைகளை பேசியது தொடர்பாக முதல்வர் பழனிசாமி விளக்கம் கேட்டால் பதில் அளிப்பேன்: எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்

சென்னை:  நாடாளுமன்றத்தில் விவசாய மசோதாக்களை அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத் ஆதரித்தார். ஆனால் இந்த மசோதாவை மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் எதிர்த்து பேசினார். எனினும் விவசாய மசோதாவை  வாக்கெடுப்பின் போது அவர் ஆதரித்தார். அதிமுகவின் இந்த இரட்டை நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து, மாநிலங்களவை அதிமுக  எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: இது இரட்டை நிலைபாடு இல்லை. அதாவது குறைந்தபட்ச ஆதாரவிலை என்பது மசோதாவில் தெளிவாக இல்லை. அதுபற்றி நான் கேள்வி கேட்டேன். குறைந்தபட்ச ஆதார விலையை நாங்கள் கொடுப்போம் என்றனர். அவ்வளவு தான். நான் பேசியதற்கு முதல்வர் என்னிடம் விளக்கம் கேட்க உள்ளதாக அவர் பேட்டி அளித்திருப்பதாக என்னிடம் கேட்கிறீர்கள்.

அதுபற்றி அவர் என்னிடம் கேட்டால் தான் நான் பதில் சொல்ல முடியும். நானாக ஏதாவது சொல்ல முடியாது. வரட்டும் அதன் பின்பு நான் இந்த கேள்விக்கு பதில் அளிக்கிறேன். விவசாய மசோதா தொடர்பான கருத்து எனது சொந்த கருத்து. அதிமுக கருத்து அல்ல என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கூறியதாக கேட்கிறீர்கள். அவருக்கு எவ்வளவு தூரம் என்னை பிடிக்கும் என்று எனக்கு தெரியாது. என்ன புரிந்து கொண்டார் என்றும் எனக்கு தெரியாது. அது அவருடைய கருத்து.  விவசாய மசோதாவை நானும் தான் ஆதரித்தேன். சில குறைகள் இருந்தது அதை சுட்டி காட்டி தான் பேசினேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Palanisamy ,SR Balasubramanian , I will reply if Chief Minister Palanisamy asks for an explanation regarding the grievances in the Agriculture Bill: SR Balasubramanian
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...