×

கர்நாடக அணைகளில் 72 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்வு

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து 72 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

கபினியில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37ஆயிரம் கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இங்கு நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது இன்று காலை 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டு கிறது.

அங்கிருந்து பாய்ந்தோடி வரும் தண்ணீர் நேற்றிரவு மேட்டூர் அணையை வந்தடைந் தது. இங்கு இரவு 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் கரையோரப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மீனவர்கள் பாதுகாப்பு கருதி இரவில் காவிரியில் மீன்பிடிக்க வலை விரிக்கவில்லை.

கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்த நிலையில், தற்போது நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் மீண்டும் உயர தொடங்கியுள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 89.77 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 91.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 54.32 டி.எம்.சியாக உள்ளது.Tags : Karnataka ,Okanagan ,Mettur dam , 72,000 cubic feet of water opened in Karnataka dams; Water level rises to 70,000 cubic feet at Okanagan: Mettur dam water level rises to 91 feet
× RELATED மீண்டும் 100 அடியை நெருங்கியது மேட்டூர் நீர்மட்டம்