×

உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு சிலர் அத்துமீறி நுழைந்து என்னை மிரட்டினார்கள்!: மக்களவையில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்..!!

டெல்லி: உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு சிலர் தன்னை மிரட்டியதாக வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் உளவுத்துறையினர் என்ற பெயரில் சிலர் அத்துமீறி நுழைந்ததாகவும், கதிர் ஆனந்த் புகார் அளித்துள்ளார். மக்களவை அவை கூடியதும் மக்களவை புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயக்கரிடம் பரபரப்பான புகார் ஒன்றினை அளித்தார். இன்று உளவுத்துறையை சேர்ந்தவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட சிலர், தன்னை மிரட்டியதாகவும், திராவிட முன்னேற்ற கழகம் நாடாளுமன்றத்திலேயே என்ன நிலைப்பாடுகளை எடுக்கப்போகிறது, எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது என்பது பற்றி தன்னிடம் கேள்வி கேட்க முயற்சி செய்ததாகவும் அவர் புகார் அளித்திருக்கிறார். தமிழத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் என்ன என்றும் தன்னிடம் அவர்கள் விசாரிக்க முற்பட்டதாகவும் அந்த புகாரில் எம்.பி. கதிர் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் தன்னுடைய அறைக்குள் இவர்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், தன்னை மிரட்ட முயற்சி செய்ததாகவும், சபாநாயகரிடம் புகார் அளித்திருக்கிறார். தமிழ்நாடு இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருப்பது மக்களவையில் உள்ள பல்வேறு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினரும், நேற்று இரவு போராட்டம் நடத்த முயற்சி செய்த போது போலீசார் தங்களிடம் அத்துமீறும் முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். சபாநாயகர் ஓம் பிர்லா, இதுகுறித்து சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : intruders ,spies ,DMK ,Lok Sabha ,Kadir Anand , Intelligence, trespassing, intimidation, MP. Kathir Anand, Lok Sabha
× RELATED மதுரை எம்பிக்கு கொரோனா